முகநூல் மூலம் மலர்ந்தது காதல்:45 வயது இந்தோனேசிய பெண்ணை கரம்பிடித்த 62 வயது மதபோதகர்
45 வயது இந்தோனேசிய பெண்ணை மணந்து குடும்பம் நடத்திய குளச்சல் மதபோதகருக்கு உறவினர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும் இந்தோனேசிய பெண்ணை வீட்டுக்குள் பூட்டி வைத்து சிறை வைத்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
குளச்சல்:
45 வயது இந்தோனேசிய பெண்ணை மணந்து குடும்பம் நடத்திய குளச்சல் மதபோதகருக்கு உறவினர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும் இந்தோனேசிய பெண்ணை வீட்டுக்குள் பூட்டி வைத்து சிறை வைத்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
62 வயது மதபோதகர்
குளச்சல் அருகே உள்ள பருத்திவிளை பகுதியை சேர்ந்த 62 வயதுடைய மதபோதகர் தனது தாயாருடன் தனியாக வசித்து வந்தார். மதபோதகருக்கு திருமணமாகவில்லை.
மேலும் அவர் வீடு, வீடாக சென்று மத போதனைகளில் ஈடுபட்டு வந்துள்ளார். கடந்த 1½ ஆண்டுகளுக்கு முன்பு மதபோதகரின் தாயார் திடீரென இறந்து விட்டார்.
அதன் பிறகு மதபோதகர் தனிமையில் இருந்த நேரத்தில் முகநூல் மூலம் 45 வயதுடைய இந்தோனேசிய பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டது. அப்போது காணொலி காட்சி மூலம் இருவரும் மதபோதனையில் ஈடுபட்டுள்ளனர்.
இந்தோனேசிய பெண்ணை மணந்தார்
ஒரு கட்டத்தில் இருவருக்கும் மனம் ஒத்துப்போக அவர்களுக்கிடையே காதல் மலர்ந்தது. இந்தநிலையில் கடந்த மாதம் 21-ந் தேதி இந்தோனேசிய பெண்ணை குமரிக்கு அழைத்து வந்த அவர் நாகர்கோவில் பகுதியில் உள்ள ஒரு ஆலயத்தில் திருமணம் செய்து கொண்டார்.
இந்த காதல் திருமணத்திற்கு உறவினர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்துள்ளனர். இந்தநிலையில் நேற்றிரவு உணவு வாங்குவதற்காக போதகர் வீட்டை விட்டு வெளியே சென்றுள்ளார். அந்த நேரம் அவரது உறவினர்கள் திடீரென வீட்டு முன்பு திரண்டு இந்தோனேசிய பெண்ணை வீட்டின் அறையில் வைத்து பூட்டி சிறை வைத்தனர். உறவினர்களின் இந்த செயலை கண்டு பெண் அதிர்ச்சி அடைந்தார்.
பூட்டி சிறை வைப்பு
மேலும் வெளியே சென்ற போதகர் வீட்டிற்கு உள்ளே செல்ல முடியாதபடி கதவுகளை பூட்டியதோடு முன்பக்க கேட்டையும் இழுத்து மூடியுள்ளனர்.
இந்தநிலையில் வீடு திரும்பிய போதகர், மனைவி சிறைவைக்கப்பட்டதை பார்த்து பதற்றம் அடைந்தார். தொடர்ந்து, தனது மனைவியை உறவினர்கள் வீட்டில் பூட்டி சிறை வைத்ததோடு தன்னை வெளியேற்றி விட்டதாகவும், மனைவியின் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டு உள்ளதாகவும், தன்னையும் தன் மனைவியையும் காப்பாற்றுமாறு போலீஸ் அவசர அழைப்பு எண் 100-க்கு போன் செய்து புகார் அளித்தார். உடனே சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த குளச்சல் போலீசார் மதபோதகரின் உறவினர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது அவர்கள் இந்தோனேசிய பெண்ணை வெளியே விட மறுத்ததோடு போதகரையும் வீட்டிற்கு உள்ளே அனுமதிக்க மறுத்து போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
போலீஸ் எச்சரித்தனர்
நள்ளிரவு வரை உறவினர்கள் தங்களுடைய எதிர்ப்பை தெரிவித்தனர். அந்த சமயத்தில் மதபோதகர், சிறை வைக்கப்பட்ட மனைவியை பார்க்க முடியாததால் பரிதவித்தபடி இருந்தார்.
பின்னர் போலீசார், கேட்டின் பூட்டை உடைத்து உள்ளே செல்ல நேரிடும் என்று மதபோதகரின் உறவினர்களிடம் எச்சரிக்கை விடுத்தனர். இதையடுத்து போதகரின் உறவினர்கள் கேட்டை திறந்து போலீசாரின் விசாரணைக்கு சம்மதித்தனர். மேலும் போதகரும் வீட்டுக்குள் அனுப்பி வைக்கப்பட்டார்.
தொடர்ந்து இருதரப்பினரையும் குளச்சல் போலீஸ் நிலையத்திற்கு விசாரணைக்கு ஆஜராகும்படி தெரிவித்தனர். மேலும் நள்ளிரவில் இருந்து போதகர் வீட்டுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது.
62 வயதில் இந்தோனேசிய பெண்ணை திருமணம் செய்த மதபோதகருக்கு எதிர்ப்பு தெரிவித்து உறவினர்கள் முற்றுகையிட்ட சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.