விருத்தாசலத்தில் 7 மாத கர்ப்பிணி அடித்துக் கொலை


விருத்தாசலத்தில் 7 மாத கர்ப்பிணி அடித்துக் கொலை
x

விருத்தாசலத்தில் வளைகாப்பு நடத்த வற்புறுத்தியதால் 7 மாத கர்ப்பிணியை அடித்துக் கொன்ற கணவரை போலீசார் கைது செய்தனர்.

கடலூர்

விருத்தாசலம்,

கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அடுத்த சின்னவடவாடி கிராமத்தை சேர்ந்தவர் கோவிந்தராஜ் மகன் அற்புதராஜ் (வயது 20). இவர் அங்குள்ள காய்கறி மார்க்கெட்டில் கூலி வேலை செய்து வருகிறார்.

இதேபோல், விருத்தாசலம் வடக்கு பெரியார் நகர் சுதாகர் நகரை சேர்ந்த லதா மகள் சக்தி(18) என்ற பெண் விருத்தாசலம் பெரியார் நகரில் உள்ள ஒரு பேக்கரி கடையில் வேலை பார்த்தார். அப்பாது அற்புதராஜிக்கும், சக்திக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டு காதலாக மாறியது. அப்போது அவர்கள் நெருங்கி பழகி இருக்கிறார்கள். இதில் சக்தி கர்ப்பமானார்.

7 மாத கர்ப்பிணி

இதையடுத்து இருவரும் கடந்த ஏப்ரல் மாதம் திருமணம் செய்து கொண்டனர். 7 மாத கர்ப்பிணியான சக்தி, தனது தாய் லதா வீட்டில் தங்கி இருந்தார். தனக்கு வளையகாப்பு நடத்த வேண்டும் என தன்னுடைய கணவர் அற்புதராஜியிடம் சக்தி கூறியுள்ளார். அதற்கு அற்புதராஜ், ஏற்கனவே கடன் அதிகமாக உள்ளது என்றும், தற்போதுள்ள நிலைமையில் வளையகாப்பு நடத்த முடியாது என்றும் கூறியுள்ளார். இதனால் இருவருக்கும் அடிக்கடி பிரச்சினை ஏற்பட்டு வந்தது.

காயங்களுடன் பிணம்

இந்த நிலையில் வீட்டில் தனியாக இருந்த சக்தி பிணமாக கிடந்தார். அவரது முகம், கழுத்து ஆகிய இடங்களில் ரத்தக் காயங்கள் இருந்தன. இதனிடையே வேலைக்கு சென்று இருந்த அவரது தாய் லதா வீட்டுக்கு வந்தார். அங்கு தனது மகள் இறந்து கிடந்தை கண்டு கதறி அழுதார்.

இது பற்றி அறிந்ததும் விருத்தாசலம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து, சக்தியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக விருத்தாசலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

அடித்துக் கொன்ற கணவர்

மேலும், சக்தியின் உடலில் இருந்த காயங்களின் அடிப்படையில் அவரை யாரேனும் கொலை செய்து இருக்கலாம் என்று போலீசார் சந்தேகித்தனர். அதன்பேரில் அற்புதராஜை பிடித்து தீவிர விசாரணை நடத்தினர். அதில், அவர் தனது காதல் மனைவியை அடித்துக் கொலை செய்ததை ஒப்புக்கொண்டார்.

கொலைக்கான காரணம் குறித்து அவர் போலீசில் அளித்த வாக்குமூலத்தில் கூறியதாவது:-

வளைகாப்பு நடத்துவதில் தகராறு

எனது மனைவி சக்தி வளையகாப்பு நடத்த வேண்டும் என்னிடம் தொடர்ந்து கூறி வந்தார். ஆனால் நான் அதற்கு மறுப்பு தெரிவித்தேன். இது தொடர்பாக எங்களுக்குள் தகராறு ஏற்பட்டது.

அப்போது, வீட்டில் கிடந்த கரண்டியால் தாக்கினேன். அதில் அவர் மயங்கி விழுந்தார். மேலும் ஆத்திரத்தில், அவரது கழுத்து, முகம் ஆகிய பகுதியில் கையால் குத்தி விட்டு வீட்டில் இருந்து மார்க்கெட்டிற்கு வேலைக்கு சென்று விட்டேன்.

நாடகமாடினேன்

இதன் பின்னர் 3 முறை வீட்டுக்கு வந்து சக்திக்கு என்ன நேர்ந்தது என்று பார்த்தேன். ஆனால் அவர் பேச்சுமூச்சு இல்லாமல் கிடந்தார். இதையடுத்து வேலைக்கு சென்றுள்ள எனது மாமியாருக்கு போன் செய்து, உங்களது மகளுக்கு போன் செய்தேன். ஆனால் அவர் போனை எடுக்கவில்லை. எனக்கு வேலை அதிகமாக இருக்கிறது. எனவே நீங்கள் சென்று பாருங்கள் என்று கூறினேன்.

அதன்பேரில் மாமியார் லதா அங்கு சென்று பார்த்தார். பின்னர், அவர் எனக்கு போன் செய்து சக்தி இறந்து விட்டதாக தெரிவித்தார். இதன் பின்னர், நான் எதுவும் தெரியாதது போல் நடித்து, வீட்டுக்கு வந்து எனது மனைவியின் உடலைப் பார்த்து கதறி அழுத்தேன். ஆனால் போலீசாரின் கிடுக்கிப்பிடி விசாரணையில் சிக்கிக்கொண்டேன்.

இவ்வாறு அவர் வாக்குமூலத்தில் கூறியுள்ளார்.

இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து அற்புதராஜை கைது செய்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபர்பபை ஏற்படுத்தி உள்ளது.


Next Story