ஸ்கூட்டரில் சென்ற பெண்ணிடம் 7 பவுன் சங்கிலி பறிப்பு
அஞ்சுகிராமம் அருகே ஸ்கூட்டரில் சென்ற பட்டதாரி பெண்ணிடம் 7 பவுன் தங்க சங்கிலியை பறித்து சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகிறார்கள்.
அஞ்சுகிராமம்:
அஞ்சுகிராமம் அருகே ஸ்கூட்டரில் சென்ற பட்டதாரி பெண்ணிடம் 7 பவுன் தங்க சங்கிலியை பறித்து சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகிறார்கள்.
பட்டதாரி பெண்
அஞ்சுகிராமம் அருகே உள்ள மயிலாடி பேரூராட்சிக்கு உட்பட்ட லட்சுமிபுரத்தைச் சேர்ந்தவர் தமிழ்ச்செல்வன். இவருடைய மனைவி சுபேதா (வயது35), பட்டதாரி. இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர். இருவரும் அந்த பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் படித்து வருகிறார்கள்.
இந்தநிலையில் ேநற்று காலையில் சுபேதா தனது இளைய மகனை பள்ளிக்கு கொண்டு விடுவதற்காக ஸ்கூட்டரில் அழைத்து சென்றார். மகனை பள்ளியில் விட்டுவிட்டு மீண்டும் வீட்டுக்கு ஸ்கூட்டரில் வந்து கொண்டிருந்தார்.
குலசேகரபுரம் செல்லும் சாலையில் வந்த போது எதிரே 2 மர்ம நபர்கள் மோட்டார் சைக்கிளில் வந்தனர். அவர்கள் திடீரென சுபேதாவை இடிப்பது போன்று வந்து வழிமறித்து நிறுத்தினர்.
சங்கிலி பறிப்பு
தொடர்ந்து அவருடைய கழுத்தில் கிடந்த 5 பவுன், 2 பவுன் என 2 தங்க சங்கிலிகளை பறித்தனர். இதை சற்றும் எதிர்பாராத சுபேதா நிலை குலைந்து கீழே விழுந்தார். இதற்குள் அந்த நபர்கள் அங்கிருந்து மின்னல் வேகத்தில் தப்பி சென்றனர்.
இதுகுறித்து சுபேதா அஞ்சுகிராமம் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அந்த புகாரின் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் கதிரேசன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். மேலும் நகை பறித்த மர்ம நபர்களை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. தனிப்படை போலீசார் அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களை கைப்பற்றி மர்ம நபர்களை அடையாளம் காணும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.
நகையை பறிகொடுத்த சுபேதாவின் கணவர் தமிழ்ச்செல்வன் எம்.எஸ்சி. பி.எட். பட்டதாரி. இவருக்கு தற்போது வரை படிப்புக்கு ஏற்ற வேலை கிடைக்கவில்லை. இந்தநிலையில் சுபேதாவின் நகையை மர்ம நபர்கள் பறித்து சென்ற சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.