கார் கவிழ்ந்து 7 வயது சிறுவன் பலி
கொடைக்கானலுக்கு சுற்றுலா சென்றபோது கார் கவிழ்ந்து 7 வயது சிறுவன் பலியானான்.
ராமநத்தம்:
சென்னை புதுப்பேட்டை கொய்யாத்தொப்பை சேர்ந்தவர் காதர்(வயது 37), இவரது மனைவி அசினா. இவர்களின் மகன் இஸான்(7). காதரின் நண்பர் செந்தில்குமார், இவரது மனைவி ஆதிலட்சுமி, இந்த தம்பதியரின் மகன்கள் பிரணவ், பிராந்தில்ஸ். இவர்கள் அனைவரும் கொடைக்கானலுக்கு சுற்றுலா செல்ல முடிவு செய்தனர். அதன்படி 7 பேரும் நேற்று சென்னையில் இருந்து கொடைக்கானலுக்கு காரில் புறப்பட்டனர்.
இந்த கார், கடலூர் மாவட்டம் வேப்பூர் அருகே சேப்பாக்கம் என்ற இடத்தில் சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் சென்றபோது திடீரென டயர் வெடித்தது. இதில் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த கார், சாலையின் நடுவில் உள்ள தடுப்புக்கட்டையில் மோதி கவிழ்ந்தது. இதில் காயமடைந்த 7 பேரையும் அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக வேப்பூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி இஸான் பரிதாபமாக இறந்தான். மற்றவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. இந்த விபத்து பற்றி தகவல் அறிந்ததும் வேப்பூர் போலீசார் விரைந்து சென்று விபத்துக்குள்ளான கார் மீட்கப்பட்டது. மேலும் விபத்தில் பலியான இஸானின் உடலை கைப்பற்றிய போலீசார், பிரேத பரிசோதனைக்காக விருத்தாசலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விபத்து தொடர்பாக வேப்பூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்