கூடலூர் அருகே வனத்தில் தாயைப்பிரிந்து தவித்த குட்டி யானை பல மணி நேரத்துக்கு பிறகு வனத்துறையினர் சேர்த்து வைத்தனர்
கூடலூர் அருகே வனத்தில் தாயைப் பிரிந்து தவித்த குட்டி யானையை வனத்துறையினர் மீட்டு திரவ உணவுகள் அளித்தனர். பின்னர் பல மணி நேரத்துக்கு பிறகு தாயுடன் சேர்த்து வைத்தனர்.
பந்தலூர்
கூடலூர் அருகே வனத்தில் தாயைப் பிரிந்து தவித்த குட்டி யானையை வனத்துறையினர் மீட்டு திரவ உணவுகள் அளித்தனர். பின்னர் பல மணி நேரத்துக்கு பிறகு தாயுடன் சேர்த்து வைத்தனர்.
தாயை பிரிந்த குட்டி யானை
நீலகிரி மாவட்டம் கூடலூர், பந்தலூர் வனப்பகுதியில் காட்டு யானைகள் உள்ளிட்ட வனவிலங்குகள் வசித்து வருகிறது. பசு தீவனத்தை தேடி காட்டு யானைகள் கூட்டமாக இடம் பெயர்ந்து செல்வது வழக்கம். இந்த நிலையில் கூடலூர் அருகே கிளன்ராக் வனத்தின் கரையோரம் சாலையில் காபி தோட்டத்திற்கு நேற்று காலை தொழிலாளர்கள் வேலைக்கு சென்றுள்ளனர்.
அப்போது சாலையோர பள்ளத்தில் குட்டி யானை ஒன்று விழுந்து எழ முடியாமல் கிடந்ததை கண்டனர். இதைத்தொடர்ந்து வனத்துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. தேவாலா வனச்சரகர் சஞ்சீவி தலைமையிலான வனவர்கள் சிவகுமார், பாலகிருஷ்ணன் உள்ளிட்ட வனத்துறையினர் நேரில் சென்று பார்வையிட்டனர். அப்போது உடல் சோர்வடைந்த நிலையில் தாயைப் பிரிந்து தவித்த குட்டி யானையை வனத்துறையினர் மீட்டனர்.
தாய் யானையுடன் சேர்ப்பு
பின்னர் தண்ணீர், பால் உள்ளிட்ட திரவ உணவை கொடுத்தனர். கடும் பசியில இருந்தா குட்டி யானை திரவ உணவை அருந்திய சிறிது நேரத்தில் எழுந்து நடக்க தொடங்கியது. பின்னர் தாய் யானையுடன் குட்டியை சேர்ப்பதற்காக வனத்துறையினர் அப்பகுதியில் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். ஆனால் தாய் யானையை காணவில்லை.
இதனால் குட்டியை அப்பகுதியில் நிறுத்தி வைத்து வனத்துறையினர் தொடர் கண்காணிப்பில் ஈடுபட்டனர். அப்போது மாலை 3.30 மணிக்கு தாய் யானை குட்டியை தேடி அதே பகுதிக்கு வந்தது. மேலும் குட்டியை கண்ட தாய்மை உணர்வுடன் காட்டு யானை வேகமாக ஓடி வந்தது. இதைக் கண்ட வனத்துறையினர் அங்கிருந்து தப்பி ஓடினர். தொடர்ந்து தாய் யானை குட்டியை அழைத்து சென்றது. இந்தப் பாச உணர்வு நிகழ்ச்சியை கண்ட வனத்துறையினர் பல மணி நேரத்துக்கு பிறகு குட்டியை தாயிடம் சேர்த்த திருப்தியில் அங்கிருந்து சென்றனர்.