ஓசூர் பகுதியில் வழிப்பறியில் ஈடுபட்டு மும்பையில் தலைமறைவாக இருந்த கொள்ளையன் சிக்கினான்
ஓசூரில் வழிப்பறியில் ஈடுபட்டு மும்பையில் தலைமறைவாக இருந்த கொள்ளையனை போலீசார் கைது செய்தனர். அவனை காவலில் எடுத்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
ஓசூர்:
ஈரானிய கொள்ளையர்கள்
இந்தியாவில் பல்வேறு இடங்களில் வழிப்பறி மற்றும் பொதுமக்களின் கவனத்தை திசை திருப்பி கொள்ளையில் ஈடுபடுவதில் மும்பையில் வசிக்கும் ஈரானிய கொள்ளையர்கள் கைதேர்ந்தவர்களாக போலீசார் கருதுகின்றனர். அவர்கள் நாடு முழுவதும் கைவரிசை காட்டி யாரிடமும் சிக்காமல் இருப்பது போலீசாருக்கு மிகப்பெரிய சவாலாக உள்ளது.
இந்த நிலையில் மத்திய பிரதேசம், ஆந்திரா, தெலுங்கானா மற்றும் தமிழகத்தில் கோவை, சேலம், தர்மபுரி மாவட்டங்களிலும், ஓசூர் பகுதியிலும் பல்வேறு இடங்களில் இந்த கும்பல் தொடர் வழிப்பறியில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில், தர்மபுரி ராஜாஜி நகர் பகுதியைச் சேர்ந்த சரோஜா (வயது 60) என்பவர், ஓசூர் வெங்கடேஸ்வரா லேஅவுட் பகுதியில் உள்ள தனது உறவினர் வீட்டு சுப நிகழ்ச்சிக்கு கடந்த ஜூன் மாதம் 11-ந் தேதி வந்திருந்தார். அப்போது ஓசூர் துணை போலீஸ் சூப்பிரண்டு அலுவலகம் முன்பு 'ஹெல்மெட்' அணிந்தவாறு மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம நபர்கள் சரோஜாவின் அருகில் வந்து அவர் கழுத்தில் அணிந்திருந்த 27 பவுன் தங்க நகையை பறித்து சென்று விட்டனர்.
கொள்ளையன் கைது
இது குறித்து அவர், ஓசூர் டவுன் போலீசில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் தனிப்படை அமைத்து கண்காணிப்பு கேமராவில் பதிவாகி இருந்த கொள்ளையர்களை வலை வீசிதேடி வந்தனர். இந்த நகைப்பறிப்பில் ஈடுபட்டது மும்பயைில் வசிக்கும் பிரபல ஈரானிய கொள்ளையர்கள் என்பது தெரிய வந்தது.
இதையடுத்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சரோஜ் தாகூர் உத்தரவின் பேரில் ஓசூர் துணை போலீஸ் சூப்பிரண்டு பாபு பிரசாந்த் மேற்பார்வையில் ஓசூர் டவுன் இன்ஸ்பெக்டர் சிவகுமார் தலைமையில் 3 பேர் கொண்ட தனிப்படை போலீசார் கொள்ளையர்களை தேடி வந்தனர்.
இந்நிலையில், கொள்ளையர்கள் மும்பையில் தங்கி இருப்பதாக கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் 2 முறை அங்கு சென்றும் கொள்ளையர்களை பிடிக்க முடியாமல் போலீசார் திரும்பி வந்தனர். 3-வது முறையாக மும்பை சென்று ஈரானிய கொள்ளை கும்பலை சேர்ந்த சமீர் சபீர் ஈரானி (வயது 27) என்பவனை, மும்பை ெரயில் நிலையத்தில் தனிப்படை போலீசார் கடும் போராட்டத்தில் ஈடுபட்டு கடந்த 8-ந் தேதி கைது செய்தனர். பின்னர் ஓசூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
இந்த நிலையில் நேற்று முன்தினம் அந்த கொள்ளையனை, 7 நாட்கள் போலீஸ் காவலில் எடுத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.