மழையூர் அரசு தொடக்கப்பள்ளி முன்பு வைக்கப்பட்ட பேனரால் பரபரப்பு
ஆங்கில வழி கல்வி நிறுத்தப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து மழையூர் அரசு தொடக்கப்பள்ளி முன்பு வைக்கப்பட்ட பேனரால் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது.
ஆங்கில வழி கல்வி நிறுத்தம்
கறம்பக்குடி அருகே உள்ள மழையூரில் நூற்றாண்டு பழமை மிக்க அரசு தொடக்கப்பள்ளி உள்ளது. இங்கு சுமார் 125 மாணவ- மாணவிகள் படித்து வருகின்றனர். கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு இந்த பள்ளியில் ஆங்கில வழி கல்வி வகுப்புகளும் தொடங்கப்பட்டன. இதில் சில மாணவர்கள் கல்வி கற்று வந்தனர். இந்நிலையில் ஆங்கில வழி கல்வியில் மாணவர்களும் பெற்றோர்களும் ஆர்வம் காட்டவில்லை எனக் கூறி பள்ளி மேலாண்மை குழு மற்றும் பெற்றோர் ஆசிரியர் சங்கத்தின் பரிந்துரையின் பேரில் இந்த கல்வி ஆண்டு முதல் ஆங்கில வழி கல்வி நிறுத்தப்பட்டது.
ஆங்கில வழி கல்வி படித்த மாணவர்கள் தமிழ் வழி கல்விக்கு மாற்றப்பட்டனர். இதற்கு பெற்றோர்களில் ஒரு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்ததாக கூறப்பட்டது. நேற்று நடைபெற்ற கிராமசபை கூட்டத்தில் மழையூர் அரசு தொடக்கப் பள்ளியில் ஆங்கில வழி கல்வி நிறுத்தப்பட்டது தொடர்பாக சிலர் எதிர்ப்பு தெரிவித்தனர்.
பேனர் வைக்கப்பட்டதால் பரபரப்பு
இதற்கிடையே இன்று மழையூர் அரசு தொடக்கப்பள்ளி முன்பு ஒரு பேனர் வைக்கப்பட்டது. அதில் ஆங்கில வழி கல்வி இப் பள்ளிக்கு வேண்டாம் என தீர்மானம் எடுத்த பள்ளி மேலாண்மை குழு தலைவர், உறுப்பினர்கள், தலைமை ஆசிரியர் உள்ளிட்டோருக்கு வருத்தத்துடன் நன்றி என குறிப்பிடப்பட்டிருந்தது. இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
இதுகுறித்து கறம்பக்குடி வட்டார கல்வி அதிகாரிகளிடம் கேட்டபோது, ஆங்கில வழி கல்வி தொடர வேண்டும் என மேலாண்மை குழுவில் தீர்மானம் நிறைவேற்றினால் மீண்டும் ஆங்கில வழி கல்வி தொடங்க நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தனர்.