பிறந்த நாள் கொண்டாடிய கல்லூரி மாணவி மீது சரமாரியாக தாக்குதல்
குளச்சல் அருகே பிறந்த நாள் கொண்டாட்டத்தில் கல்லூரி மாணவியை தாக்கிய பள்ளிக்கூட நண்பன் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
குளச்சல்:
குளச்சல் அருகே பிறந்த நாள் கொண்டாட்டத்தில் கல்லூரி மாணவியை தாக்கிய பள்ளிக்கூட நண்பன் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
கல்லூரி மாணவி
குளச்சல் பகுதியை சேர்ந்த ஒரு போதகரின் 19 வயதுைடய மகள் கருங்கல் அருகே உள்ள ஒரு தனியார் கல்லூரியில் 3-ம் ஆண்டு படித்து வருகிறார். இவர் நேற்று முன்தினம் இரவு தனது பிறந்த நாளை கொண்டாட 2 தோழிகள் மற்றும் ஒரு நண்பரை வீட்டிற்கு அழைத்திருந்தார். அவர்கள் வீட்டு மொட்டை மாடியில் பிறந்த நாள் விழா கொண்டாட தயாராகி கொண்டிருந்தனர்.
அப்போது கல்லூரி மாணவியின் பள்ளிக்கூட நண்பரான சுங்கான்கடையை சேர்ந்த அஜின் என்பவர் இவரது வீட்டிற்கு வந்தார். அதாவது மொட்டைமாடியில் பிறந்த நாள் கொண்டாட்டம் நடைபெறுவதை அறிந்த அவர் வீட்டின் அருகே நின்ற புளியமரத்தில் ஏறி மொட்டை மாடிக்கு சென்றார்.
கட்டையால் தாக்குதல்
பின்னர் மாணவியிடம் தகராறு செய்த அவர் திடீரென கட்டையால் அவரை சரமாரியாக தாக்கி விட்டு தப்பி சென்றார். இதைபார்த்த தோழிகளும், நண்பரும் அதிர்ச்சி அடைந்தனர்.
படுகாயமடைந்த மாணவி உடையார்விளையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். இதுகுறித்த புகாரின் பேரில் அஜின் மீது குளச்சல் போலீசார் வழக்குப்பதிவு செய்து கல்லூரி மாணவி தாக்கப்பட்டதற்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். இரவில் மொட்டை மாடி ஏறி சென்று கல்லூரி மாணவியை பள்ளிக்கூட நண்பர் தாக்கிய சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.