ஊட்டியில் உணவு தேடி ஊருக்குள் புகுந்த கரடி-பொதுமக்கள் அச்சம்


ஊட்டியில் உணவு தேடி ஊருக்குள் புகுந்த கரடி-பொதுமக்கள் அச்சம்
x
தினத்தந்தி 27 May 2023 12:30 AM IST (Updated: 27 May 2023 12:30 AM IST)
t-max-icont-min-icon

உணவுகளை தேடி, ஊருக்குள் கரடி வந்து செல்வதால் பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.

நீலகிரி

ஊட்டி

உணவுகளை தேடி, ஊருக்குள் கரடி வந்து செல்வதால் பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.

வனவிலங்குகள் நடமாட்டம்

நீலகிரி மாவட்டம் ஊட்டி, கோத்தகிரி, குன்னூர், கூடலூர், ஓவேலி, மஞ்சூர் உள்பட 65 சதவீதத்திற்கும் அதிகமாக வனப்பகுதிகளை கொண்டு உள்ளது. இதற்கிடையே கடந்த சில நாட்களாக வனப்பகுதியில் இருந்து வனவிலங்குகள் அதிக அளவில் ஊருக்குள் புகுந்து அட்டகாசம் செய்து வருகின்றன. குறிப்பாக குன்னூர், கோத்தகிரி, மஞ்சூர் பகுதிகளில் கரடி, சிறுத்தை நடமாட்டமும், கூடலூர் பகுதியில் காட்டு யானை நடமாட்டம் அதிகரித்து உள்ளது.

இந்த நிலையில் நேற்று காலை ஊட்டி அருகே உள்ள போர்த்தியாடா எல்லைக்கண்டி பகுதியில் கரடி ஒன்று வளர்ப்பு பிராணி போல் சாலையில் உலா வந்துள்ளது.

உணவு கழிவுகளை தேடி...

இதன் பின்னர் சாலையோரம் இருந்த குப்பைத்தொட்டியில் ஏறி, பிளாஸ்டிக் கவரில் இருந்த உணவு கழிவுகளை எடுத்துக்கொண்டு அங்கேயே தின்றுவிட்டு மீண்டும் வனப்பகுதிக்குள் ஓட்டம் பிடித்தது. இந்த காட்சிகளை அங்கிருந்த ஒருவர் செல்போன் மூலம் வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பரப்பினார். இந்த காட்சிகள் வைரலாக பரவி வருகிறது.

இதுகுறித்து சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் கூறுகையில், நீலகிரி போன்ற வனப்பகுதியில் உணவு கழிவுகளை வனப்பகுதியை ஒட்டி உள்ள குப்பை தொட்டிகளில் கொட்டக் கூடாது. குப்பை தொட்டியில் உணவு கழிவுகளை கொட்டுவதால் கரடி உள்ளிட்ட வனவிலங்குகள் ஊருக்குள் படையெடுத்து வருகின்றன. அந்த சமயங்களில் மனித- வனவிலங்கு மோதல் ஏற்பட்டு உயிர் இழப்பு ஏற்படலாம். இதை வனத்துறையினர் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வனவிலங்குகள் ஊருக்குள் வருவதை தடுக்க வேண்டும். மேலும் பிளாஸ்டிக் பயன்பாடுகள் அதிகரித்து வருவதால் அதையும் கண்காணித்து பிளாஸ்டிக் பயன்பாட்டை குறைக்க வேண்டும். இல்லையெனில் வனவிலங்குகள் பிளாஸ்டிக் பொருட்களை தின்று உயிரிழக்கும் அபாயம் உள்ளது, என்றனர்.


Next Story