இரவில் குட்டியுடன் சுற்றித் திரியும் கரடி
விக்கிரமசிங்கபுரம் அருகே இரவு நேரத்தில் குட்டியுடன் சுற்றி திரியும் கரடியால் பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளனர். மேலும் இந்த காட்சிகள் சமூக வலைத்தளங்களில் ரைவலாகி வருகின்றன.
விக்கிரமசிங்கபுரம்:
பாபநாசம் மேற்குத்தொடர்ச்சி மலையில் புலி, சிறுத்தை, யானை, கரடி, மான், மிளா, காட்டுப்பன்றி உள்பட ஏராளமான வனவிலங்குகள் உள்ளன. இந்தநிலையில் பாபநாசம் மலை அடிவாரத்திலுள்ள திருப்பதியாபுரம், வேம்பையாபுரம், செட்டிமேடு உள்பட சுற்றுவட்டார பகுதிகளுக்கு அவ்வப்போது யானை, சிறுத்தை, கரடி உள்ளிட்ட வனவிலங்குகள் வந்து கால்நடைகள் மற்றும் விளைநிலங்களை சேதப்படுத்தி வருவது தொடர் கதையாக உள்ளது.
இந்த நிலையில் கடந்த சில நாட்களாக பாபநாசம் மலை அடிவாரத்தில் திருப்பதியாபுரம் மில் காலனி அருகே இரவு 7 மணிக்கு மேல் கரடி ஒன்று அதன் இரு குட்டிகளுடன் சுற்றி திரிந்துள்ளது. இந்தநிலையில் அந்த கரடி அதன் குட்டிகளை முதுகில் சுமந்தவாறு தற்போது சுற்றி திரிந்தது. அந்த காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. இரவு நேரத்தில் கரடி நடமாட்டம் இருப்பதால் அப்பகுதியினர் இரவு நேரங்களில் வீட்டை விட்டு வெளிவர அச்சப்படுகிறார்கள்.