பேரிடர் காலத்தில் படகாக மாறும் படுக்கை


பேரிடர் காலத்தில் படகாக மாறும் படுக்கை
x

பேரிடர் காலத்தில் படகாக மாற்றி கொள்ளும் வகையிலான படுக்கையை திருச்சி என்.ஐ.டி பேராசிரியர் கண்டுபிடித்துள்ளார்.

திருச்சி

பேரிடர் காலத்தில் படகாக மாற்றி கொள்ளும் வகையிலான படுக்கையை திருச்சி என்.ஐ.டி பேராசிரியர் கண்டுபிடித்துள்ளார்.

படகாக மாறும் படுக்கை

பருவமழை காலங்களில் பல்வேறு மாநிலங்களில் அவ்வப்போது மழை வெள்ள பாதிப்பு ஏற்பட்டு வருகிறது. இதுபோன்ற பேரிடர் காலகட்டங்களில் வீடுகளுக்குள் மழைநீர் புகுவதும், மக்கள் வெள்ளத்தில் சிக்குவதும், பொருள் மற்றும் உயிர் சேதம் ஏற்படுவதும் தவிர்க்க முடியாததாக உள்ளது.

வெள்ளக்காலங்களில் வயதானவர்கள், மாற்றுத்திறனாளிகள், நோயாளிகள், குழந்தைகளை மீட்பது சவால்நிறைந்த பணியாக உள்ளது. வீடுகளை சுற்றி வெள்ளநீர் தேங்கி வெளியே வர முடியாமல் தவிப்பவர்களை படகில் சென்று தான் மீட்கிறார்கள்.

இந்த மழைக்காலத்தில் சமூகத்துக்கு பயனளிக்கும் வகையில் படுக்கை, இருக்கை, படகு என 3 அம்சங்களும் பொருந்தும் வகையில் புதியதொரு கண்டுபிடிப்பை திருச்சி என்.ஐ.டி. பேராசிரியர் எஸ்.முத்துகுமரன் வடிவமைத்துள்ளார். திருச்சி என்.ஐ.டி. ஆராய்ச்சித்துறை புல முதன்மையரும், உலோகவியல் மற்றும் பொருள்கள் பொறியியல் பிரிவு பேராசிரியருமான இவர், கிட்டத்தட்ட 1½ ஆண்டு ஆய்வுக்கு பிறகு, பாலிமர் மேட்ரிக்ஸ், கண்ணாடிஇழை, செயற்கைஇழை, பைபர், ஸ்டீல், மூங்கில் ஆகியவற்றை கொண்டு இதை வடிவமைத்ததாக கூறி உள்ளார்.

மத்திய மந்திரி பாராட்டு

இதை இருவர் சராசரியாக படுக்கும் வகையில் கட்டிலாக பயன்படுத்தலாம் அல்லது அலுவலகங்கள், மருத்துவமனைகள், வணிக நிறுவனங்களில் பலர் அமரக்கூடிய பர்னிச்சர் (இருக்கை) ஆகவும் பயன்படுத்தலாம். மழை வெள்ளக்காலங்களில் தண்ணீர் சூழ்ந்தால் இந்த அமைப்பை உடனடியாக தலைகீழாக திருப்பி படகுபோல மாற்றி கொள்ள முடியும். இது தண்ணீரில் படகுபோல மிதந்து செல்லும்.

இதை இயக்குவதற்காக இரண்டு துடுப்புகளும் அடிப்பகுதியில் இணைக்கப்பட்டுள்ளது. இந்த கண்டுபிடிப்புக்கு காப்புரிமை கோரி பதிவு செய்யப்பட்டுள்ளது. சமீபத்தில் என்.ஐ.டி.க்கு வந்த மத்திய கல்வி இணைமந்திரி சுபாஷ்சர்கார் இந்த புதிய கண்டுபிடிப்பை பார்த்து பாராட்டினார். மேலும், இதை வடிவமைக்க ரூ.15 ஆயிரம் செலவானதாகவும், இன்னும் எளிமையுடன் குறைந்தபட்சம் ரூ.10 ஆயிரத்தில் வடிவமைக்க முடியும் என்று பேராசிரியர் முத்துகுமரன் கூறிஉள்ளார்.


Related Tags :
Next Story