தேசியக்கொடியின் மூவர்ணத்தில் காட்சியளிக்கும் மணிக்கூண்டு


தேசியக்கொடியின் மூவர்ணத்தில் காட்சியளிக்கும் மணிக்கூண்டு
x

மயிலாடுதுறையில் தேசியக்கொடியின் மூவர்ணத்தில் காட்சியளிக்கும் மணிக்கூண்டு காட்சியளிக்கிறது

மயிலாடுதுறை

பெரும்பாலான நகரங்களின் மையப் பகுதிகளில் முக்கிய அடையாளமாக மணிக்கூண்டு அமைக்கப்பட்டுள்ளது. கைக்கடிகாரம் கட்டும் பழக்கம் குறைவாக காணப்பட்ட காலத்தில் நேரத்தை அறிவதற்காக நகரின் மையப் பகுதியில் மணிக்கூண்டு அமைக்கப்பட்டுள்ளதாக பரவலாக கூறப்படுகிறது. அந்த அடிப்படையில் மயிலாடுதுறை நகரின் முக்கிய வீதியான பட்டமங்கல தெருவில் காந்திஜிரோடு சந்திக்கும் பகுதியில் 1943-ம் ஆண்டு மணிக்கூண்டு கட்டப்பட்டது. இந்த மணிக்கூண்டு பல ஆண்டுகள் கடந்தும் கம்பீரமாக காட்சி அளிக்கிறது. மணிக்கூண்டு நகராட்சியின் கட்டுப்பாட்டில் உள்ளது. இந்த நிலையில் 75-வது சுதந்திர தினத்தையொட்டி மயிலாடுதுறை மணிக்கூண்டிற்கு பா.ஜ.க. சார்பில் தேசியக்கொடியின் மூவர்ணம் பூச நகராட்சி நிர்வாகத்திடம் அனுமதி கேட்கப்பட்டிருந்தது. இதுதொடர்பாக மயிலாடுதுறை உதவி கலெக்டர் யுரேகா தலைமையில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. இதில் மயிலாடுதுறை மணிக்கூண்டிற்கு நகராட்சி நிர்வாகம் சார்பில் தேசியக்கொடியின் மூவர்ணம் தீட்டுவது என முடிவு செய்யப்பட்டது. இதை தொடர்ந்து நகராட்சி நிர்வாகம் சார்பில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு வர்ணம் பூசும் பணி தொடங்கப்பட்டு நேற்று நிறைவடைந்தது. தற்போது தேசிய கொடியின் முவர்ணத்தில் மணிக்கூண்டு கம்பீரமாக காட்சி அளிக்கிறது. இதை பொதுமக்கள் பார்த்து ரசித்து செல்கின்றனர்.



Next Story