பப்ஜி விளையாட்டை புறக்கணித்த மாணவனுக்கு சைக்கிள் பரிசு


பப்ஜி விளையாட்டை புறக்கணித்த மாணவனுக்கு சைக்கிள் பரிசு
x
தினத்தந்தி 29 March 2023 12:15 AM IST (Updated: 29 March 2023 12:17 AM IST)
t-max-icont-min-icon

டி.ஜி.பி. சைலேந்திர பாபுவின் ஊக்கம் அளிக்கும் பேச்சுகளை கேட்டு பப்ஜி விளையாட்டை புறக்கணித்த மாணவனுக்கு போலீசார் சைக்கிள் பரிசை வழங்கினர்.

கன்னியாகுமரி

டி.ஜி.பி. சைலேந்திர பாபுவின் ஊக்கம் அளிக்கும் பேச்சுகளை கேட்டு பப்ஜி விளையாட்டை புறக்கணித்த மாணவனுக்கு போலீசார் சைக்கிள் பரிசை வழங்கினர்.

தூய்மை பணியாளர் மகன்

நெல்லை மாவட்டம் மணிமுத்தாறு பகுதியை சேர்ந்தவர் ரஹ்மத்மீரா. இவர் மணிமுத்தாறு போலீஸ் பட்டாலியன் வளாகத்தில் ஒப்பந்த அடிப்படையில் தூய்மை பணியாளராக வேலை பார்த்து வருகிறார். இவருக்கு உவேஷ் அல்தாப் (வயது13) என்ற மகனும், ஒரு மகளும் உள்ளனர். சிறுவன் உவேஷ் அல்தாப் தற்போது அருகில் உள்ள பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வருகிறான்.

ரஹ்மத்மீரா கொரோனா கால கட்டத்தில் தனது மகன் மற்றும் மகளுக்கு ஆன்லைன் வகுப்பில் பங்கேற்க செல்போன் வாங்கி கொடுத்தார்.

ஊக்கம் அளிக்கும் பேச்சுகள்

அவர்கள் அந்த செல்போனில் யூ டியூப் மூலம் போலீஸ் டி.ஜி.பி. சைலேந்திர பாபுவின் ஊக்கம் அளிக்கும் (மோட்டிவேஷனல்) பேச்சுகளை பார்த்தனர்.

இதையடுத்து மாணவன் உவேஷ் அல்தாப், தனது தாயாரிடம் கூறுகையில், 'குழந்தைகள் பப்ஜி கேம் விளையாட கூடாது. அப்படி விளையாடாமல் இருந்தால் சைக்கிள் வாங்கித் தருவேன்' என்று ஒரு வீடியோவில் டி.ஜி.பி. குறிப்பிட்டதாக தெரிவித்தான். மேலும் பப்ஜி கேம் விளையாடாமல் டி.ஜி.பி. சைக்கிள் வாங்கி தருவார் என்று 3 ஆண்டுகளாக காத்திருந்தான்.

சைக்கிள் பரிசு

இந்த நிலையில் கடந்த வாரம் மணிமுத்தாறு பகுதியில் டி.ஜி.பி. சைலேந்திரபாபு ஆய்வுக்கு வந்திருந்தார். அப்போது அவரை சந்தித்த உவேஷ் அல்தாப், 'நான் நீங்கள் கூறியபடி பப்ஜி கேம் விளையாடாமல் உள்ளேன், எனக்கு எப்போது சைக்கிள் வாங்கி தருவீர்கள்' என்று கேட்டான். இதனை தொடர்ந்து அந்த சிறுவனுக்கு சைக்கிள் வாங்கி கொடுக்கும் படி அதிகாரிகளுக்கு டி.ஜி.பி. சைலேந்திர பாபு உத்தரவிட்டார்.

இதைத்தொடர்ந்து கன்னியாகுமரியில் நடைபெற்ற விழாவில் மாணவன் உவேஷ் அல்தாப்புக்கு சென்னை பெருநகர போலீஸ் இணை ஆணையர் சாமுண்டீஸ்வரி, குமரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரண் பிரசாத் ஆகியோர் சைக்கிள் பரிசளித்தனர்.


Next Story