கப்பலூர் சுங்கச்சாவடியை அகற்றாவிட்டால் முற்றுகை போராட்டம்


கப்பலூர் சுங்கச்சாவடியை அகற்றாவிட்டால் முற்றுகை போராட்டம்
x

மத்திய மந்திரி உறுதி அளித்தபடி கப்பலூர் சுங்கச்சாவடியை அகற்றாவிட்டால் முற்றுகை போராட்டம் நடைெபறும் என காங்கிரஸ் கட்சியினர் அறிவித்துள்ளனர்.

விருதுநகர்


மத்திய மந்திரி உறுதி அளித்தபடி கப்பலூர் சுங்கச்சாவடியை அகற்றாவிட்டால் முற்றுகை போராட்டம் நடைெபறும் என காங்கிரஸ் கட்சியினர் அறிவித்துள்ளனர்.

சுங்கச்சாவடி

மதுரை-விருதுநகர் இடையே கப்பலூரில் அமைக்கப்பட்டுள்ள சுங்கச்சாவடி விதிமுறைகளுக்கு முரணாக திருமங்கலம் நகராட்சி பகுதியில் அமைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் நான்கு வழிச்சாலையில் பயணிக்காத வாகனங்களிடமும் சுங்க கட்டணம் வசூலிக்கும் நிலையில் இதனை அகற்ற வேண்டுமென மாணிக்கம் தாகூர் எம்.பி., தென்காசி தொகுதி எம்.பி. தனுஷ்குமார் ஆகியோர் தலைமையில் சுங்கச்சாவடி மீட்புக் குழு தலைவர் ஜெயராமன் உள்ளிட்ட காங்கிரஸ் கட்சியினர் மத்தியதரை வழி போக்குவரத்து மந்திரி நிதின்கட்காரியை சந்தித்து வலியுறுத்தினர்.

அப்போது அவர் விரைவில் சுங்கச்சாவடிகள் அகற்றப்படும் என்றும் கப்பலூர் சுங்கச்சாவடியை அகற்ற நடவடிக்கை எடுப்பதாகவும் உறுதியளித்தார். ஆனாலும் இதுவரை நடவடிக்கை எடுக்கப்படாத நிலை நீடிக்கிறது.

கண்டனம்

கப்பலூர் சுங்கச்சாவடியில் அடிக்கடி வாகன ஓட்டிகளுடன் அங்குள்ள ஊழியர்கள் சட்டம் ஒழுங்குப் பிரச்சினையை ஏற்படுத்துவதுடன் வாகன ஓட்டிகளை தாக்குவதும் அதிகரித்து வரும் நிலை உள்ளது.

இதற்கு பல்வேறு தரப்பினர் கண்டனம் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து பல்வேறு அரசியல் கட்சியினர் போராட்டம் நடத்தியும் உரிய நடவடிக்கை எடுக்கப்படாத நிலை நீடிக்கிறது.

போராட்டம்

இதுகுறித்து கப்பலூர் சுங்கச்சாவடி மீட்பு குழு தலைவர் ஜெயராமன் மற்றும் விருதுநகா் நாடாளுமன்ற தொகுதி முன்னாள் இளைஞர் காங்கிரஸ் தலைவர் மீனாட்சி சுந்தரம் ஆகியோர் கூறியதாவது:- மாணிக்கம் தாகூர் எம்.பி. தலைமையில் மத்திய மந்திரி நிதின்கட்காரியை சந்தித்து கப்பலூர் சுங்கச்சாவடி பிரச்சினைகளை குறித்து தெரிவித்த போது அவர் அதனை அகற்ற நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார். மேலும் 60 கி. மீ. இடைவெளியில் உள்ள சுங்கச்சாவடிகள் அகற்றப்படும் என்றும் விரைவில் இதற்கான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்தார். ஆனால் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதேநிலை நீடித்தால் கப்பலூர் சுங்கச்சாவடியை அகற்ற வலியுறுத்தி காங்கிரஸ் கட்சி சார்பில் முற்றுகை போராட்டம் நடத்தப்படும்.

இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.


Next Story