சேலம் ஆனந்தா பாலம் பகுதியில் கேட்பாரற்று நின்ற காரில் வெடிகுண்டு சோதனை


சேலம் ஆனந்தா பாலம் பகுதியில்  கேட்பாரற்று நின்ற காரில் வெடிகுண்டு சோதனை
x

சேலம் ஆனந்தா பாலம் பகுதியில் கேட்பாரற்று நின்ற காரில் வெடிகுண்டு சோதனை நடத்தப்பட்டதால் பரபரப்பு நிலவியது.

சேலம்

சேலம்,

குண்டு வெடிப்பு

கோவையை தொடர்ந்து, சமீபத்தில் கர்நாடக மாநிலம் மங்களூருவில் குண்டு வெடிப்பு சம்பவம் நடந்தது. இதனால் நாடு முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

இதன் ஒருபகுதியாக பல ஆண்டுகளாக ஒரே இடத்தில் கேட்பாரற்று நிற்கும் கார்களை கண்டறிந்து அவற்றை சோதனை செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது. அந்த வகையில் சேலம் மாவட்டத்தில் பொது இடங்களிலும், அரசு அலுவலகங்களிலும் பல ஆண்டுகளாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ள வாகனங்களை போலீசார் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

காரில் சோதனை

இதனிடையே, சேலம் டவுன் ஆனந்தா பாலம் பகுதியில் கார் ஒன்று கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக கேட்பாரற்று நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. இதுபற்றி அறிந்த அப்பகுதி பொதுமக்கள் உடனடியாக மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்திற்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில், டவுன் போலீசார் மற்றும் வெடிகுண்டு நிபுணர்கள் அந்த பகுதிக்கு விரைந்து சென்றனர்.

பின்னர் அவர்கள் அந்த காரில் வெடிகுண்டு சோதனை செய்யும் பணியில் ஈடுபட்டனர். ஆனால் அதில் சந்தேகத்திற்குரிய பொருட்கள் எதுவும் இல்லை. அதே நேரத்தில் காரின் உரிமையாளரான அதேபகுதியில் பழக்கடை வைத்து நடத்தி வரும் நடராஜன் என்பவர் அங்கு வந்தார். அவரிடம் விசாரித்தபோது, அங்கு காரை அவர் தான் நிறுத்தியதாக கூறினார்.

ஒரு வாரத்திற்கு மேலாக காரை பொது இடத்தில் நிறுத்தியது ஏன்? என்பது குறித்து அவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் வேறு எங்கேயும் இதுபோன்று கேட்பாரற்று கார்கள் நிறுத்தப்பட்டுள்ளதா? என்பது குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

கேட்பாரற்று நின்ற காரில் வெடிகுண்டு சோதனை நடத்தப்பட்டதால் சேலம் ஆனந்தா பாலம் பகுதியில் பரபரப்பு நிலவியது.


Next Story