டியூசனுக்கு சென்ற இடத்தில் கழிவுநீர் தொட்டியில் விழுந்து சிறுவன் பலி


டியூசனுக்கு சென்ற இடத்தில் கழிவுநீர் தொட்டியில் விழுந்து சிறுவன் பலி
x

டியூசனுக்கு சென்ற இடத்தில் கழிவுநீர் தொட்டியில் விழுந்து சிறுவன் உயிரிழந்தான்.

ராமநாதபுரம்,

ராமநாதபுரம் அருகே உள்ள காரிக்கூட்டம் பகுதியை சேர்ந்தவர் கோபாலகிருஷ்ணன் (வயது 38). ராமநாதபுரம் அத்தியூத்து கிராம நிர்வாக அதிகாரியாக பணியாற்றி வருகிறார். இவருக்கு எழில்மாறன் (11), யாழினி (9) என்ற 2 குழந்தைகள். இவர்கள் 2 பேரும் ராமநாதபுரம் அருகே உள்ள தனியார் பள்ளியில் படித்து வந்தனர்.

அண்ணன், தங்கை 2 பேரும் அந்த பகுதியில் உள்ள ஆசிரியை வீட்டிற்கு சென்று டியூசன் படித்து வந்துள்ளனர்.

இந்தநிலையில் நேற்று முன்தினம் மாலையில் வழக்கம் போல டியூசனுக்கு சென்றுள்ளனர். டியூசன் முடியும் நேரத்தில் பிள்ளைகளை அழைத்து வர கோபாலகிருஷ்ணன் சென்றிருந்தார். ஆனால், யாழினி மட்டும் வந்தாள். மகன் எழில் மாறனை காணவில்லை.

கழிவுநீர் தொட்டியில் இருந்து மீட்பு

உடனே கோபாலகிருஷ்ணன் ஆசிரியை வீட்டிற்கு சென்று மகன் குறித்து கேட்டுள்ளார். அதற்கு ஆசிரியை எழில்மாறன் ஏற்கனவே சென்றுவிட்டதாக தெரிவித்துள்ளார். அப்போது மாணவி ஒருவர் அங்குள்ள கழிவறை பக்கம் சத்தம் கேட்டதாக கூறியுள்ளார். இதனால் அங்கு ஓடிச்சென்று பார்த்த கோபாலகிருஷ்ணன், கழிவுநீர் தொட்டியின் ஒரு பகுதி உடைந்திருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்து தனது மகன் உள்ளே விழுந்திருப்பானோ என்று கருதி 5 அடி ஆழ தொட்டிக்குள் உள்ளே இறங்கி பார்த்துள்ளார். மகன் உடல் தென்படவே அலறியடித்து உடனடியாக அவனை மேலே தூக்கி வந்தார். பின்னர் அவனை தூக்கிக்கொண்டு ராமநாதபுரம் அரசு ஆஸ்பத்திரிக்கு சென்றனர்.

அங்கு பரிசோதித்த டாக்டர், சிறுவன் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தார்.

மகன் உடலை கையில் வைத்து கோபாலகிருஷ்ணன் மற்றும் குடும்பத்தினர் கதறி அழுதனர். இதுபற்றி தகவல் அறிந்த ராமநாதபுரம் கலெக்டர் ஜானிடாம் வர்கீஸ் ஆஸ்பத்திரிக்கு வந்து விசாரித்தார்.


Next Story