இளம்பிள்ளை அருகே குட்டையில் மூழ்கி சிறுவன் சாவு
இளம்பிள்ளை அருகே குட்டையில் மூழ்கி சிறுவன் இறந்தான்.
இளம்பிள்ளை:
இளம்பிள்ளை அடுத்த நடுவனேரி கிராமம் கோட்டை புதூர் பகுதியை சேர்ந்த மாதேஷ் மகன் தேவராஜ் (வயது 9). இவன் கடந்த 24-ந் தேதி வீட்டில் விளையாடி கொண்டிருந்தபோது மாயமானான். அவனை அக்கம் பக்கம் மற்றும் உறவினர்கள் வீடுகளில் தேடியும் கிடைக்கவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த தாய் மோகனா மகுடஞ்சாவடி போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார்.
இந்த நிலையில் நேற்று கோட்டை புதூர் பகுதியில் உள்ள ஒரு குட்டையில் சிறுவன் உடல் மிதப்பதாக மகுடஞ்சாவடி போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் சம்பவ இடத்துக்கு சென்று பார்த்ததில் பிணமாக மிதந்தது காணாமல் போன தேவராஜ் என்பது தெரியவந்தது. இதையடுத்து சிறுவனின் உடலை மீட்ட போலீசார் பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் தேவராஜ் குட்டையில் மூழ்கி இறந்தது தெரியவந்துள்ளது. எனினும் இதுதொடர்பாக போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ராஜேந்திரன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.