அசாத்திய திறமையால் அசத்தும் வேலூர் சிறுவன்
தேதிகளை கூறினால் கிழமையை சொல்லி தனித்திறமையால் வேலூரை சேர்ந்த 6 வயது சிறுவன் சாதனை படைத்துள்ளான்.
வேலூர் சிறுவன்
இன்றைய காலக்கட்டத்தில் வெகு சில குழந்தைகளின் அறிவும், திறமையும் யாரும் எதிர்பார்க்காத அளவில் இருக்கும். அதன்படி வேலூரை சேர்ந்த 6 வயது சிறுவனின் அதீத திறமை வியக்கும் வகையில் உள்ளது.
யார் அந்த சிறுவன்?, அவனின் திறமை தான் என்ன? என்பதை இங்கு காண்போம்:-
வேலூர் தோட்டப்பாளையத்தை சேர்ந்தவர் பிரகாஷ். தனியார் மருத்துவமனை ஊழியர். இவரது மனைவி சங்கீதபிரியா. தனியார் பள்ளி ஆசிரியை. இவர்களது மூத்த மகன் ரக்ஷன் (வயது 6). இவன்தான் அனைவரின் பாராட்டுக்கும் சொந்தக்காரன். அதீத நினைவாற்றல் படைத்தவன். சிறுவனின் தாயார் கடந்த 2022-ம் ஆண்டு டி.என்.பி.எஸ்.சி. குரூப்-2 தேர்வுக்கு தயாராகி வந்தார். அப்போது தேர்வு நாள் எந்த கிழமையில் வருகிறது என காலண்டரில் பார்த்துக்கொண்டிருந்தார்.
இதுகுறித்து பிரகாஷ், மனைவியிடம் காலண்டரில் என்ன பார்க்கிறாய்? என்று கேட்டுள்ளார். அப்போது, தேர்வு நாளை கூறி, இது எந்த கிழமையில் வருகிறது என்று பார்க்கிறேன் என்று பதில் அளித்துள்ளார்.
இதை அருகில் விளையாடிக்கொண்டிருந்த சிறுவன் ரக்ஷன் கேட்டுவிட்டு, அடுத்தவினாடியே அம்மா அந்த தேதி சனிக்கிழமையில் வருகிறது என்று கூறினான். இதனால் அவர்கள் ஆச்சரியம் அடைந்தனர். அதை காலண்டரில் சரிபார்த்தபோது சரியான கிழமையைதான் அவன் கூறி உள்ளான்.
தேதிகளும், கிழமைகளும்...
எப்படி-? இந்த கிழமை உனக்கு தெரியும் என்று பெற்றோர் கேட்டுள்ளனர். எனக்கு 2022-ம் ஆண்டின் அனைத்து தேதிகளின் கிழமையும் தெரியும் என்றான். அதுமட்டுமின்றி அந்த ஆண்டில் அமாவாசை, பவுர்ணமி, கிருத்திகை உள்ளிட்ட பண்டிகைகள் எந்த கிழமையில் வரும் என்பதையும் சரியாக கூறினான். இதையடுத்து சிறுவனின் அசாதாரண திறமையை அவர்கள் அறிந்தனர். அதைத்தொடர்ந்து அடுத்த 10 ஆண்டுகளின் தேதிகள் மற்றும் அந்த தேதிகளில் வரும் கிழமைகளை துல்லியமாக கூறும் அளவுக்கு சிறுவன் கற்றுக்கொண்டான். இவரின் இந்த திறமை 'கலாம் உலக சாதனை' புத்தகத்தில் இடம் பெற்றது.
சிறுவனின் திறமையை தமிழக டி.ஜி.பி. சைலேந்திரபாபு பாராட்டி ஊக்கப்படுத்தினார். பின்னர் வேலூர் மாவட்ட கலெக்டர் குமாரவேல்பாண்டியன் சிறுவனை நேரில் அழைத்து பாராட்டி பரிசுகள் வழங்கினார். அப்போது சிறுவனின் திறமைகளையும் சோதித்து பார்த்தார். இதையடுத்து முன்னாள் போலீஸ் சூப்பிரண்டு ராஜேஷ்கண்ணனும் பாராட்டி, அப்துல்கலாம் சாதனைகள் அடங்கிய குறிப்புகள் கொண்ட புத்தகத்தை பரிசாக வழங்கினார். அதைத்தொடர்ந்து கதிர்ஆனந்த் எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் ஏ.பி.நந்தகுமார், கார்த்திகேயன், மேயர் சுஜாதா உள்ளிட்டோரும் சிறுவனை பாராட்டினர்.
அடுத்த சாதனைக்கு தயாராகும் சிறுவன்
இத்தோடு திறமையை நிறுத்திக்கொள்ளாமல் தமிழகத்தில் உள்ள வாகன பதிவெண்கள் எந்தெந்த பகுதியை சேர்ந்தது என்பதை 2 நிமிடங்கள் ஒரு வினாடியில் கூறி, 'இன்டர்நேஷனல் புக் ஆப் ரெக்கார்ட்ஸ்' என்ற சாதனை புத்தகத்தில் இந்தசாதனை இடம்பெற்றது. தற்போது 50 ஆண்டுகளின் தேதிகள் மற்றும் கிழமைகளை கூறும் வகையில், அடுத்த உலக சாதனை படைக்க தயாராகி வருவதாக பெற்றோர் தெரிவித்தனர்.