சிதம்பரம் அருகே சிறுமியை காதலிக்குமாறு வற்புறுத்திய வாலிபர் கைது
சிதம்பரம் அருகே சிறுமியை காதலிக்குமாறு வற்புறுத்திய வாலிபர் கைது செய்யப்பட்டாா்.
சேத்தியாத்தோப்பு,
சிதம்பரம் அருகே உள்ள வாழக்கொல்லையை சேர்ந்தவர் மணி மகன் கார்த்திகேயன் (வயது 32). இவர் சம்பவத்தன்று தனது பாஸ்போர்ட் அளவு புகைப்படத்தின் பின்புறம் செல்போன் எண்ணை எழுதி, அதே பகுதியை சேர்ந்த பிளஸ்-1 படிக்கும் 16 வயது மாணவியிடம் கொடுத்துள்ளார். அப்போது அவர், அந்த மாணவியிடம் தான் அவரை காதலிப்பதாக கூறியுள்ளார். இதனால் பதறிய மாணவி, தனது பெற்றோரிடம் தெரிவித்தால் படிக்க விடமாட்டார்கள் என நினைத்து யாரிடமும் கூறாமல் இருந்துள்ளார்.
இதனால் கார்த்திகேயன், அடிக்கடி அந்த மாணவியை பின்தொடர்ந்து தொல்லை கொடுத்து வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் சம்பவத்தன்று அந்த மாணவியிடம் தன்னை காதலிக்குமாறு கார்த்திகேயன் தொந்தரவு செய்துள்ளார். இதில் பாதிக்கப்பட்ட மாணவி, சேத்தியாத்தோப்பு அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன் பேரில் போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்து கார்த்திகேயனை கைது செய்தனர்.