பெரம்பலூரில் கல்லூரி மாணவியுடன் விடுதியில் தங்கியிருந்த வாலிபர் போக்சோவில் கைது


பெரம்பலூரில் கல்லூரி மாணவியுடன் விடுதியில் தங்கியிருந்த வாலிபர் போக்சோவில் கைது
x

பெரம்பலூரில் கல்லூரி மாணவியுடன் விடுதியில் தங்கியிருந்த வாலிபர் போக்சோவில் கைது செய்யப்பட்டார். மேலும் அவர்களுக்கு அறை கொடுத்த ஊழியரும் சிக்கினார்.

பெரம்பலூர்

பெரம்பலூர் மாவட்ட குழந்தைகள் கடத்தல் தடுப்பு பிரிவு இன்ஸ்பெக்டர் விஜயலட்சுமி தலைமையிலான போலீசார் நேற்று மதியம் வெங்கடேசபுரம் பகுதியில் உள்ள ஒரு தனியார் தங்கும் விடுதியில் அதிரடியாக சோதனை செய்தனர். அப்போது விடுதியில் ஒரு கல்லூரி மாணவியுடன், வாலிபர் ஒருவர் தங்கியிருந்தார். மேலும் அந்த மாணவிக்கு 16 வயது என்பதை போலீசார் கண்டுபிடித்தனர்.

பின்னர் அந்த மாணவியை போலீசார் மீட்டு குழந்தைகள் காப்பகத்தில் ஒப்படைத்தனர். பின்னர் அந்த மாணவியுடன் தங்கி இருந்தவரையும், அவர்களுக்கு அறை கொடுத்த விடுதி ஊழியரையும் பிடித்து போலீசார் விசாரித்தனர்.

விசாரணையில், கல்லூரி மாணவியுடன் விடுதியில் தங்கியிருந்தவர் பெரம்பலூர் மாவட்டம், குன்னம் தாலுகா, ஒதியம் வடக்கு தெருவை சேர்ந்த சுப்ரமணி மகன் வெங்கடேஷ் (வயது 23) என்பதும், மேலும் அவருடன் இருந்த மாணவி பாலிடெக்னிக் கல்லூரி விடுதியில் தங்கி படித்து வருவதும் தெரியவந்தது. மேலும் இவர்களுக்கு அறை கொடுத்த விடுதி ஊழியர் தஞ்சாவூர் மாவட்டம், பாபநாசம் தாலுகா, கூனஞ்சேரி மேலத்தெருவை சேர்ந்த சந்தானம் மகன் மாதவன் (30) என்பதும் தெரியவந்தது.

வெங்கடேஷ் எம்.எஸ்சி. (கணினி அறிவியல்) படித்து முடித்து விட்டு சொந்த ஊரில் ஆட்டோ ஓட்டி வருகிறார். மேலும் அவர் அந்த மாணவியை கடந்த 3 மாதங்களாக காதலித்து வந்ததாகவும் கூறப்படுகிறது. நேற்று முன்தினம் அவர்கள் இருவருக்கும் இடையே செல்போனில் பேசும் போது சண்டை வந்ததாகவும், அதனால் பேசி சமாதானம் ஆக வெங்கேடஷ் அந்த மாணவியை இரவில் அழைத்து வந்து விடுதியில் அறை எடுத்து தங்கியிருந்தது விசாரணையில் தெரியவந்ததாக போலீசார் தரப்பில் கூறப்பட்டது.

விடுதி ஊழியர் மாதவன் மாணவிக்கு 16 வயது என தெரிந்தும் விடுதியில் தங்க அறை வாடகைக்கு கொடுத்து அனுமதித்துள்ளார். இதையடுத்து வெங்கடேஷ், மாதவன் ஆகியோர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்த போலீசார் இருவரையும் கைது செய்தனர்.


Next Story