நகராட்சி பள்ளியில் காலை சிற்றுண்டி திட்டத்தை செயல்படுத்த வேண்டும்


நகராட்சி பள்ளியில் காலை சிற்றுண்டி திட்டத்தை செயல்படுத்த வேண்டும்
x

ஆற்காட்டில் விடுபட்ட நகராட்சி பள்ளியில் காலை உணவு திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என்று நகரமன்ற கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.

ராணிப்பேட்டை

ஆற்காட்டில் விடுபட்ட நகராட்சி பள்ளியில் காலை உணவு திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என்று நகரமன்ற கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.

நகரமன்ற கூட்டம்

ஆற்காடு நகரமன்ற கூட்டம் நகரமன்ற தலைவர் தேவி பென்ஸ் பாண்டியன் தலைமையில் நடந்தது. துணைத்தலைவர் டாக்டர் பவளக்கொடி சரவணன், ஆணையாளர் கணேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் நகர மன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டு பேசியதாவது:-

பொன்.ராஜசேகர்: வீட்டு வரி கட்ட ஒவ்வொரு வீட்டிற்கும் கடிதம் அனுப்பி உள்ளீர்கள், யாரை கேட்டு இவ்வாறு கடிதம் அனுப்புகின்றீர்கள். நகரில் துப்புரவு பணிகள் சரியாக நடைபெறுவது கிடையாது.

சுகாதார ஆய்வாளர் பாஸ்கரன்: அரசு உத்தரவின் பேரில்தான் ஒவ்வொரு வீட்டிற்கும் கடிதம் அனுப்பப்படுகிறது. நகரில் துப்புரவு பணிகள் சரியாக நடைபெற நடவடிக்கை எடுக்கப்படும்.

காலை உணவுதிட்டம்

ரவிச்சந்திரன்: எனது வார்டில் நகராட்சிக்குட்பட்ட இரண்டு பள்ளிகள் உள்ளன. ஒரு பள்ளிக்கு மட்டும் காலை உணவு திட்டம் வழங்கப்படுகிறது. மற்றொரு பள்ளிக்கு வழங்கப்பட வில்லை. அந்தப் பள்ளிக்கும் காலை உணவு திட்டம் வழங்க வேண்டும்.

ஆணையாளர் கணேசன்: நகராட்சி பள்ளிகள் எத்தனை உள்ளன என்று கணக்கெடுக்கப்பட்டு அரசுக்கு அனுப்பப்பட்டுள்ளது. விரைவில் அந்தப் பள்ளிக்கும் காலை உணவு திட்டத்தின் கீழ் உணவு வழங்கப்படும்.

செல்வம்: எனது வார்டில் உள்ள அரசு பள்ளியில் தலைமை ஆசிரியரை மாற்ற தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. ஆனால் இதுவரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை.

நகரமன்ற தலைவர்: நடவடிக்கை எடுக்கப்படும்.

பேட்டரி வாகனம்

கண்ணன்: புதியதாக வீடு கட்டுபவர்கள் வீட்டின் முன்னால் உள்ள கழிவுநீர் கால்வாயின் மீது சிலாப்புகள் கொண்டு மூடி விடுகின்றனர். இதனால் கால்வாயில் அடைப்பு ஏற்பட்டால் கால்வாய் மீது மூடப்பட்டுள்ள சிலாப்களை உடைக்க எதிர்ப்பு தெரிவிக்கின்றனர்.

கண்மணி: ராஜகோபால் தெருவில் குடிநீர் பிரச்சினை நீண்ட நாட்களாக உள்ளது. இதுவரை தீர்க்கப்படவில்லை.

ஜெயந்தி: மேனேஜர் தெருவில் மின் விளக்குகள் இல்லாத கம்பங்களில் மின் விளக்குகள் அமைக்க வேண்டும். எனது வார்டில் குப்பைகள் சேகரிக்க பேட்டரி வாகனம் வேண்டும்.

தலைவர்: நிதி வந்தவுடன் மின்விளக்குகள் இல்லாத கம்பங்களில் விளக்குகள் அமைக்கப்படும். பேட்டரி வாகனம் பழுதடைந்துள்ளது. இது சம்பந்தமாக அதிகாரிகள் இடத்தில் மனு கொடுக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு வாதம் நடைபெற்றது.

கூட்டத்தில் நகரமன்ற உறுப்பினர்கள், அதிகாரிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story