ரங்கராஜபுரம் வாய்க்காலில் பாலம் அமைக்க வேண்டும்
விவசாய தேவைகளுக்கு மிகவும் அத்தியாவசியமான குறிச்சி ரங்கராஜன் பாசன வாய்க்காலின் குறுக்கே பாலம் அமைத்துதர வேண்டும் என்று விவசாயிகள் நீண்ட காலமாக கோரிக்கை விடுத்து வருகின்றனர். பாலம் இல்லாததால் மார்பளவு தண்ணீரில் விவசாய இடுபொருட்களை எடுத்துச் செல்லும் அவல நிலையில் உள்ளதாக விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர்.
ரங்கராஜபுரம் பாசன வாய்க்கால்
அரியலூர் மாவட்டம், தா.பழூர் அருகே உள்ள குறிச்சி கிராமத்தில் பூவோடையிலிருந்து பிரிந்து செல்லும் ரங்கராஜபுரம் பாசன வாய்க்கால் அமைந்துள்ளது. இந்த பாசன வாய்க்கால் மூலம் அப்பகுதியில் சுமார் ஆயிரம் ஏக்கர் நிலப்பரப்பில் 2 போக சம்பா நெல் சாகுபடி நடைபெற்று வருகிறது. மேலும் பம்பு செட் வசதி உள்ள விவசாயிகள் உதவியுடன் சுமார் 300 ஏக்கர் நிலப்பரப்பில் 3-வது போகமும் நெல் விவசாயம் செய்யப்பட்டு வருகிறது. இந்த வயல்களுக்கு விவசாயிகள் நாற்றங்கால் தயாரிப்பது முதல் விதை இடுதல், களை எடுத்தல், நாற்று பறித்தல், உழவு செய்தல், உரம் இடுதல், விளைந்த விளை நெல்களை வாகனங்களில் ஏற்றி எடுத்து வருதல் உள்ளிட்ட அனைத்து விவசாய பணிகளுக்கும் ரங்கராஜபுரம் வாய்க்காலை கடந்துதான் செல்ல வேண்டும். பாசன வாய்க்காலில் தண்ணீர் வரும் காலங்களிலும் அந்த வாய்க்காலை கடந்து செல்ல பாதை இல்லாமல் முட்டளவு தண்ணீர் முதல் மார்பளவு தண்ணீர் வரை உள்ள வாய்க்காலை நடந்து தான் கடந்து செல்ல வேண்டிய சூழ்நிலை உள்ளது. விதை நெல், இடுபொருட்கள் உள்ளிட்டவற்றை வாய்க்காலில் தண்ணீர் வரும்போது விவசாயிகள் வாய்க்காலுக்குள் இறங்கி எடுத்துச்செல்லும் அவல நிலை நீண்ட காலமாக தொடர்வதாக விவசாயிகள் வேதனை தெரிவித்தனர்.
தரமான தார் சாலை
வாய்க்காலை கடப்பதற்கு விவசாயிகள் தங்கள் முயற்சியால் மூங்கில் பாலம் ஒன்றையும் அமைத்து, அதனை விவசாய தேவைகளுக்கு பயன்படுத்துகின்றனர். ஆனால் அந்தப் பாலமும் குறுகிய காலத்தில் உடைந்து வீணாகி விடுகிறது. அதுபோல் குறிச்சி பொன்னாற்றங்கரை முதல் ரங்கராஜபுரம் வாய்க்கால் வரை உள்ள சாலை சேறும், சகதியுமாக நடப்பதற்கு பயன்படுத்த முடியாத வகையில் அமைந்துள்ளது. எனவே விவசாய தேவைக்கு பயன்படுத்தும் வகையில் ரங்கராஜபுரம் வாய்க்கால் வரை தரமான தார் சாலை அமைத்து தர வேண்டும் என்று விவசாயிகள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
குறிச்சி கிராமத்திலிருந்து ரங்கராஜபுரம் வாய்க்கால் கரை அருகில் ஒரு மயானமும், ரங்கராஜபுரம் வாய்க்காலை கடந்து சென்று சிறிது தூரத்தில் இன்னொரு மயானமும் அமைந்துள்ளது. அந்த மயானங்களுக்கு இறந்தவர்களின் உடலை சுமந்து செல்லும் சூழ்நிலையில் வாய்க்காலில் தண்ணீர் வரத்து அதிகமாக இருந்தால் அப்போதும் மார்பளவு தண்ணீரில் வாய்க்காலை கடந்து செல்வது தீராத துயரமாக இருந்து வருவதாக அப்பகுதி மக்கள் வேதனை தெரிவித்தனர். பொன்னாற்றங்கரை முதல் ரங்கராஜபுரம் வாய்க்கால் வரை தார் சாலை அமைப்பதற்கும், ரங்கராஜபுரம் வாய்க்காலை கடந்து செல்வதற்கும் உயர்நிலைப்பாலம் அமைக்கவும் வேண்டும் என்று சுமார் 40 ஆண்டுகளாக அரசுக்கு அப்பகுதி மக்கள் கோரிக்கை மனுக்களாக கொடுத்து வருகின்றனர்.
பாலம் அமைக்க வேண்டும்
அதிகாரிகள் அப்பகுதிக்கு வந்து பார்வையிட்டு செல்கிறார்களே தவிர ஆனால் இதுவரை பாலம் அமைப்பதற்கோ மயானம் மற்றும் விவசாய பயன்பாட்டிற்கு சாலை அமைப்பதற்கோ எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று குற்றம் சாட்டுகின்றனர். இதுகுறித்து அப்பகுதியில் வசித்து வரும் விவசாயி செபஸ்டியன் கூறியபோது:- எனக்கு நினைவு தெரிந்த நாள் முதல் எனது முன்னோர்களும், நானும் ரங்கராஜபுரம் வாய்க்காலை கடந்து சென்று எங்கள் நிலத்தில் விவசாயம் செய்வதற்கு சாலை வசதியும், பாலமும் அமைத்து தர வேண்டும் என்று ஒன்றிய அலுவலக அதிகாரிகள் மற்றும் பொதுப்பணித்துறை அதிகாரிகளிடம் மனுக்களை வழங்கி கோரிக்கை விடுத்து வருகிறோம். ஆனால் எங்களது கோரிக்கை நீண்ட நாட்கள் ஆகியும் இதுவரை எந்த அரசாலும், அதிகாரிகளாலும் செய்து தரப்படவில்லை. எங்கள் பகுதி விவசாயிகளின் உண்மை நிலையை புரிந்து கொண்டு அரசு உடனடியாக சாலை வசதி செய்து தருவதோடு பாலம் அமைத்து தர வேண்டும் என்றார்.
மிகுந்த சிரமம்
குறிச்சி கிராமத்தை சேர்ந்த விவசாயி ஜான்சிராணி தெரிவித்தபோது:- எனக்கு திருமணமாகி குறிச்சி கிராமத்திற்கு வந்த நாள் முதல் ரங்கராஜபுரம் வாய்க்காலையொட்டி உள்ள மயானத்திற்கும், அதனை கடந்து செல்லும் வாய்க்காலுக்கும் இந்த பாதை வழியாக செல்வதற்கு சரியான சாலை வசதியோ அல்லது பாலமோ இல்லாமல் இப்பகுதி மக்கள் மிகுந்த சிரமம் அடைந்து வருகின்றனர். ஒரு கிராமத்தின் அடிப்படை தேவையான மயான பாதை கூட குறிச்சி கிராமத்தில் சரியாக இல்லாத நிலையில் நாங்கள் இங்கு வசித்து வருகிறோம். இனியும் அரசு தாமதிக்காமல் எங்களுக்கு தரமான தார் சாலை மற்றும் பாலம் அமைத்து தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறினார். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.