ராமேசுவரத்தில் உடைந்து கிடக்கும் ரெயில் பெட்டி பராமரிக்கும் தளம்
ராமேசுவரத்தில் ரெயில் பெட்டி பராமரிக்கும் தளம் உடைந்து கிடக்கிறது. அதை சீரமைக்கக்கோரி ரெயில்வே தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள்.
ராமேசுவரம்,
ராமேசுவரத்தில் ரெயில் பெட்டி பராமரிக்கும் தளம் உடைந்து கிடக்கிறது. அதை சீரமைக்கக்கோரி ரெயில்வே தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள்.
உடைந்து கிடக்கும் தளம்
அகில இந்திய புண்ணிய தலங்களில் ஒன்றாக கருதப்படும் ராமேசுவரம் பகுதிக்கு சென்னை, மதுரை, திருச்சி, திருப்பதி, கன்னியாகுமரி, கோவை, வாரணாசி, அயோத்தி, ஒடிசா, செகந்திராபாத் உள்ளிட்ட பல்வேறு ஊர்களில் இருந்தும் ரெயில்கள் வருகின்றன.
அதுபோல் ராமேசுவரத்தில் இருந்து அந்த ஊர்களுக்கு ரெயில்கள் இயக்கப்படுகின்றன. ராமேசுவரம் வரும் ரெயில்களின் பெட்டிகளை சுத்தம் செய்வதற்காகவே ரெயில்வே நிலையம் அருகிலேயே ரெயில் பெட்டிகளை பராமரிக்கும் தளம்(பிட்லைன்) உள்ளது. பயணிகள் ரெயிலை தவிர சென்னை, கோவை, திருப்பதி உள்ளிட்ட மற்ற அனைத்து ஊர்களில் இருந்து வரும் ரெயில்களின் பெட்டிகளும் ராமேசுவரம் ரெயில்வே நிலையத்தில் உள்ள பிட் லைனில் நிறுத்தப்பட்டு ரெயில் பெட்டிகள் சுத்தம் செய்யப்பட்டு வருகின்றது.
அங்குள்ள ரெயில் பெட்டிகளை பராமரிக்கும் தளம் கான்கிரீட் பெயர்ந்து பல இடங்களில் உடைந்து காணப்படுகிறது. அந்த நடைமேடையில் நின்று கொண்டு தான் தொழிலாளர்கள் தண்ணீரை பீய்ச்சி அடித்து ரெயில் பெட்டிகளை சுத்தம் செய்கின்றனர். சில நேரங்களில் வேலையின் கவனத்தோடு நடைமேடையில் கான்கிரீட் உடைந்து கிடப்பதை அறியாமல் தவறி கீழே விழுந்து காயம் அடைகின்றனர்.
ஆர்ப்பாட்டம்
எனவே ஆபத்தான பிட்லைனை உடனடியாக சீரமைக்க வலியுறுத்தி நேற்று ரெயில்வே நிலையத்தில் தெற்கு ரெயில்வே மஸ்தூர் யூனியன் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்திற்கு கிளை தலைவர் பாஸ்கரன் தலைமை தாங்கினார். கோட்ட உதவி தலைவர் சண்முகவேல், கோட்ட உதவி செயலாளர் சீதாராமன், கிளைச் செயலாளர் முத்துக்குமார் உள்ளிட்ட ஏராளமான ரெயில்வே தொழிலாளர்கள் மற்றும் பெண் பணியாளர்களும் கலந்து கொண்டனர். சேதமடைந்து கிடக்கும் ரெயில்வே பிட்லைனை உடனடியாக சீரமைக்க நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் அடுத்த கட்டமாக ராமேசுவரம் வரும் ரெயில்களின் பெட்டிகளை பராமரிப்பு பணியில் ஈடுபடாமல் வேலை நிறுத்த போராட்டம் செய்ய திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகின்றது.