சாலையோரத்தில் எரிந்து கிடந்த மோட்டார் சைக்கிள்
திருச்சி-திண்டுக்கல் நான்கு வழிச்சாலையில், வடமதுரை அருகே ரெட்டியப்பட்டி என்னுமிடத்தில் சாலையோரம் மோட்டார் சைக்கிள் ஒன்று எரிந்து கிடந்தது.
திருச்சி-திண்டுக்கல் நான்கு வழிச்சாலையில், வடமதுரை அருகே ரெட்டியப்பட்டி என்னுமிடத்தில் சாலையோரம் மோட்டார் சைக்கிள் ஒன்று நேற்று காலை எரிந்து கிடந்தது. இதனைப்பார்த்த அப்பகுதி மக்கள் அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் இதுகுறித்து வடமதுரை போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் சம்பவ இடத்திற்கு போலீசார் விரைந்து சென்று மோட்டார் சைக்கிளை கைப்பற்றி விசாரணை நடத்தினர்.
விசாரணையில், அந்த மோட்டார் சைக்கிள் ரெட்டியப்பட்டியை சேர்ந்த செல்வம் (வயது 35) என்பவருக்கு சொந்தமானது என்பது தெரியவந்தது. இதையடுத்து அவரிடம் போலீசார் விசாரணை நடத்தினர். அதில் நேற்று முன்தினம் இரவு செல்வம் வீட்டுக்கு சென்றபோது, மோட்டார் சைக்கிள் திடீரென தீப்பிடித்ததாகவும், அதனை தண்ணீரை ஊற்றி அணைத்துவிட்டு அங்கேயே விட்டு சென்றதாகவும் கூறினார். இதுகுறித்து போலீஸ் நிலையத்துக்கு தகவல் தெரிவிக்காமல் இருந்தது தவறு என்று செல்வத்துக்கு அறிவுரை கூறி போலீசார் அனுப்பினர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.