லாரி மீது பஸ் மோதியதில்18 பயணிகள் படுகாயம்
எப்போதும்வென்றானில் லாரி மீது பஸ் மோதியதில் 18 பயணிகள் படுகாயம் அடைந்தனர்.
ஓட்டப்பிடாரம்:
எப்போதும் வென்றான் அருகே நான்கு வழிச்சாலையில் லாரி மீது பஸ் மோதி விபத்துக்குள்ளானது. இதில் 18 பயணிகள் படுகாயம் அடைந்தனர்.
தனியார் பஸ்
தூத்துக்குடியில் இருந்து நேற்று மாலையில் தனியார் பஸ் ஒன்று கோவில்பட்டிக்கு புறப்பட்டது. பஸ்சை ஏரல் அருகே உள்ள இடையர்காடு பகுதியைச் சேர்ந்த சிவக்குமார் (வயது 55) என்பவர் ஓட்டினார். மாலை நேரம் என்பதால் பஸ்சில் 60-க்கும் மேற்பட்ட பயணிகள் இருந்தனர்.
எப்போதும்வென்றானை கடந்து மஞ்சநாயக்கன்பட்டி விலக்கு பகுதியில் நான்கு வழிச்சாலையில் பஸ் சென்று கொண்டு இருந்தது.
லாரி மீது மோதல்
அந்த சாலையில் தூத்துக்குடியில் இருந்து ஜிப்சம் ஏற்றிக்கொண்டு மதுரை நோக்கி ஒரு லாரி சென்று ெகாண்டு இருந்தது. கண் இமைக்கும் நேரத்தில் பஸ்சானது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து லாரியின் பின்பக்கம் பயங்கரமாக மோதி விபத்துக்குள்ளானது.
இதில் பஸ்சின் முன்பகுதி முழுவதும் நொறுங்கி உருக்குலைந்தது. உள்ளே இருந்த பயணிகள் அலறியடித்து வெளியே வந்தனர். மேலும் இடிபாடுகளில் பலர் சிக்கி அபயக்குரல் எழுப்பினர்.
போலீசார் விரைந்தனர்
இதை பார்த்த அந்த வழியாக சென்ற ெபாதுமக்கள் அதிர்ச்சி அடைந்து, மீட்பு பணியில் ஈடுபட்டனர். மேலும் இதுகுறித்து உடனடியாக எப்போதும்வென்றான் போலீசுக்கும், கோவில்பட்டி தீயணைப்பு நிலையத்திற்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது.
சப்-இன்ஸ்பெக்டர் செந்தில்வேல்முருகன் தலைமையில் போலீசாரும் மற்றும் தீயணைப்பு படையினரும் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். பஸ்சின் இடிபாடுகளில் சிக்கிய பயணிகளை ஜன்னல் கம்பிகளை வளைத்து மீட்டனர்.
18 பேர் படுகாயம்
இந்த கோர விபத்தில் பஸ் டிரைவர் சிவக்குமார், பிள்ளையார்நத்தத்தை சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி (35), கரூரைச் சேர்ந்த கதிர்வேல் (42), அவரது மனைவி மருதராணி (36), தூத்துக்குடி சோலையப்பன் (72), கீர்த்திக்தேவ் (12), ரக்ஜீத் (6), லிங்ககனி (35), ராஜலட்சுமி (55), கோவில்பட்டி கணேசபெருமாள் (51), பாலசுப்பிரமணியன் (57), சிவசக்தி விக்னேஸ்வரி (31), ரோஸ்லின் டெய்சி ராணி (49), பெருமாள் சாமி (58), சங்கரன்கோவில் கமலா (56), சத்தியமங்கலம் தீனதர்ஷன் (10), எட்டயபுரம் விஷ்வா (19) உள்பட 18 பேர் படுகாயம் அடைந்தனர். இவர்கள் சிகிச்சைக்காக எட்டயபுரம் மற்றும் தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
இந்த விபத்து குறித்து எப்போதும் வென்றான் போலீசர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்