அன்னப்பறவையின் கழுத்து வடிவிலான கற்றாழை பூ


அன்னப்பறவையின் கழுத்து வடிவிலான கற்றாழை பூ
x

கொடைக்கானலில் சுற்றுலா பயணிகளை கவர்ந்திழுக்கும் வகையில், அன்னப்பறவையின் கழுத்து வடிவிலான கற்றாழை பூ பூத்துள்ளது.

திண்டுக்கல்

'மலைகளின் இளவரசி' என்று அழைக்கப்படும் கொடைக்கானலில் கொட்டிக்கிடக்கும் இயற்கை எழில் கொஞ்சும் காட்சிகளுக்கு பஞ்சம் இல்லை. காலநிலைக்கு ஏற்ப அங்கு பூத்துக்குலுங்கும் பல வண்ண பூக்கள் விழிகளுக்கு விருந்து படைக்கும். அந்த வகையில், கொடைக்கானல் கோக்கர்ஸ் வாக் என்ற சுற்றுலாதலம் அருகே தனியார் மருத்துவமனை வளாகத்தில், கற்றாழை பூ ஒன்று பூத்துள்ளது.

கடந்த 35 ஆண்டுகளுக்கு முன்பு 'ஸ்வேன் நெக் அகேவ்' என்று அழைக்கப்படுகிற கற்றாழை நாற்று ஓட்டல் நிர்வாகம் சார்பில் அங்கு நடப்பட்டது. தற்போது அந்த கற்றாழையில் இருந்து ஒரேயொரு பூ பூத்துள்ளது. அரியவகை மலரான இந்த கற்றாழை பூ அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. அதாவது அன்னப்பறவையின் கழுத்து போன்ற தோற்றத்தில் இந்த பூ உள்ளது. இதனால் இந்த பூவை 'ஸ்வேன் நெக் மலர்' என்று அழைக்கின்றனர். சுமார் 10 அடி உயரத்தில் வளைந்தநிலையில் காணப்படும் இந்த கற்றாழை பூ காண்போரை கவர்ந்திழுக்கிறது.இந்த வகை கற்றாழை நடவு செய்து, பூ பூப்பதற்கு 35 ஆண்டு முதல் 50 ஆண்டுகள் வரை ஆகும் என்று கூறப்படுகிறது. அதுவும் ஒரு செடியில் ஒரே ஒரு முறை மட்டுமே பூ பூக்குமாம். பூத்த மலர் வாடி வதங்கும் போது, கற்றாழை செடியும் காய்ந்து தனது ஆயுளை முடித்து விடும் என்று கூறுகின்றனர். விழிகளை விரிய வைக்கும் இந்த கற்றாழை மலரை சுற்றுலா பயணிகள் மட்டுமின்றி உள்ளூர்வாசிகளும் பார்த்து ரசித்து செல்கின்றனர்.


Next Story