ரேஷன் அரிசி கடத்திச் சென்ற கார் விபத்தில் சிக்கியது
திசையன்விளை அருகே ரேஷன் அரிசி கடத்திச் சென்ற கார் விபத்தில் சிக்கியது.
திசையன்விளை:
திசையன்விளையை அடுத்த நம்பிக்குறிச்சி விலக்கு அருகே நேற்று மாலை அரிசி மூட்டைகளை ஏற்றிக்கொண்டு கார் சென்று கொண்டிருந்தது. அந்த கார் அங்குள்ள வளைவான பகுதியில் திரும்பும்போது டிரைவர் கட்டுப்பாட்டை இழந்து அருகில் உள்ள குளத்தில் கவிழ்ந்தது. இதனை பார்த்த அந்தப்பகுதி மக்கள் திசையன்விளை போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் விரைந்து வந்து சம்பவ இடத்தை பார்வையிட்டபோது காரில் ரேஷன் அரிசி கடத்தியது தெரியவந்தது. கார் டிரைவர் தப்பி ஓடிவிட்டார்.
போலீசார் கொடுத்த தகவலின்பேரில் நாங்குநேரி பறக்கும் படை தனி தாசில்தார் சுப்பு, திசையன்விளை வட்டார வழங்கல் அலுவலர் கணபதி, குடிமை பொருள் வழங்கல் குற்றப்பிரிவு ஆய்வாளர் கோட்டை சாமி மற்றும் அதிகாரிகள் காரில் இருந்த 40 மூட்டை ரேஷன் அரிசியை கைப்பற்றி வள்ளியூர் நுகர் பொருள் வாணிபக் கிடங்கிற்கு அனுப்பி வைத்தனர். தப்பி ஓடிய கார் டிரைவரை உணவு கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் தேடி வருகின்றனர்.