விக்கிரவாண்டியில்மர்மமான முறையில் தீ பற்றி எரிந்த கார்காரணம் என்ன? போலீஸ் விசாரணை
விக்கிரவாண்டியில் மர்மமான முறையில் கார் தீ பற்றி எரிந்தது. இதற்கான காரணம் என்ன என்பது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
விக்கிரவாண்டி,
விக்கிரவாண்டி பழைய போலீஸ் ஸ்டேஷன் தெருவை சேர்ந்தவர் முகமது சாலி (வயது 50). இவர் பழைய பொருட்கள் வாங்கி விற்பனை செய்யும் கடை நடத்தி வருகிறார்.
நேற்று முன்தினம் இரவு 9 மணிக்கு தனது காரை சர்வீஸ் செய்து ஒர்க் ஷாப்பிலிருந்து வீட்டுக்கு எடுத்து வந்தார். பின், வீட்டு முன்பு காரை நிறுத்திவிட்டு தூங்க சென்றார்.
நள்ளிரவு 1 மணியளவில் கார் திடீரென தீப்பற்றி எரிந்தது. இதை எதிர்வீட்டில் உள்ளவர்கள் பார்த்துள்ளனர். உடன், அவர்கள் முகமது சாலிக்கு போன் செய்து தெரியப்படுத்தினர்.
காரணம் என்ன?
இதையடுத்து, அவர் வெளியே ஓடோடி வந்தார். கார் முழுவதும் தீ பற்றி எரிந்தது. இதுபற்றி தகவல் அறிந்த விக்கிரவாண்டி தீயணைப்பு வீரர்கள், போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அணைத்தனர். இருப்பினும் கார் முழுவதும் எரிந்து சேதமானது.
இது குறித்த புகாரின் பேரில் விக்கிரவாண்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து, தீ விபத்துக்கான காரணம்? குறித்து பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகிறார்கள். வீட்டு முன்பு நிறுத்தியிருந்த கார், நள்ளிரவில் மர்மமான முறையில் தீப்பற்றி எரிந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.