தேசிய நெடுஞ்சாலை தடுப்புச்சுவர் மீது கார் மோதி விபத்து
நாட்டறம்பள்ளி அருகே தேசிய நெடுஞ்சாலை தடுப்புச்சுவர் மீது கார் மோதியதில் 3 பேர் காயம் அடைந்தனர்.
திருப்பத்தூர் மாவட்டம் நாட்டறம்பள்ளி அருகே கேத்தாண்டப்பட்டி பகுதியில் அமைந்துள்ள திருப்பத்தூர் கூட்டுறவு சர்க்கரை ஆலை எதிரே நேற்று காலை வேலூர்-கிருஷ்ணகிரி தேசிய நெடுஞ்சாலையில் கார் சென்று கொண்டிருந்தது. இந்த கார் கட்டுப்பாட்டை இழந்து சாலையின் நடுவே உள்ள தடுப்புச்சுவர் மீது மோதி சேதமடைந்தது.
காரில் தருமபுரி மாவட்டம் கரியமங்கலம் மாட்லாம்பட்டி பகுதியைச் சேர்ந்த மாதையன் (வயது 67), இவரது மனைவி மஞ்சுளா (50), இவர்களது மகள் ஷாலினி (28), ஷாலினியின் 3 வயது குழந்தை ஆகிய நான்கு பேர் பயணம் செய்தனர். அவர்களில் 3 வயது குழந்தை எந்த வித காயமுமின்றி உயிர் தப்பியது. மாதையன் உள்பட 3 பேர் காயமடைந்துள்ளனர்.
இது குறித்து தகவல் அறிந்ததும் நாட்டறம்பள்ளி போலீசார் விரைந்து சென்று காயமடைந்தவர்களை சிகிச்சைக்காக நாட்டறம்பள்ளி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.