சாலையோரம் நின்ற நண்பர்கள் மீது கார் மோதல்; வாலிபர் பலி


சாலையோரம் நின்ற நண்பர்கள் மீது கார் மோதல்; வாலிபர் பலி
x

சாலையோரம் நின்ற நண்பர்கள் மீது கார் மோதியதில் வாலிபர் உயிரிழந்தார்.

அரியலூர்

தா.பழூர்:

கார் மோதியது

அரியலூர் மாவட்டம், தா.பழூர் அருகே உள்ள சிலால் மெயின்ரோடு பகுதியை சேர்ந்த ராஜேந்திரனின் மகன் எழிலரசன்(வயது 19). இவரும், சிலால் தெற்கு தெருவை சேர்ந்த நாகராஜனின் மகன் பரத்(20), அங்கராயநல்லூர் சாவடி தெருவை சேர்ந்த மாயகிருஷ்ணனின் மகன் சுதாகர்(15) ஆகியோரும் நேற்று முன்தினம் ஜெயங்கொண்டத்தில் உள்ள ஒரு தியேட்டரில் சினிமா பார்த்தனர். பின்னர் நள்ளிரவில் சிலாலுக்கு அவர்கள் திரும்பி வந்தனர். சிலால் வால் பட்டறை அருகில் அவர்கள் இருசக்கர வாகனங்களுடன் சாலையோரத்தில் நின்று பேசிக் கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. அப்போது அவர்கள் மீது, சென்னை விமான நிலையத்தில் இருந்து கும்பகோணம் அருகே உள்ள திருநாகேஸ்வரம் நோக்கி வந்த கார் மோதியதாக கூறப்படுகிறது.

சாவு

இதில் தூக்கி வீசப்பட்ட எழிலரசன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். அவரது நண்பர்களான பரத், சுதாகர் ஆகியோர் காயமடைந்தனர். இதையடுத்து அவர்கள் தா.பழூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்த சம்பவம் குறித்து தா.பழூர் போலீசார் அங்கு சென்று எழிலரசனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அவரது உடலை கண்டு உறவினர்கள் கதறி அழுதது, காண்போரையும் கண் கலங்க செய்தது. மேலும் இது குறித்து விசாரணை நடத்தி, காரை ஓட்டி வந்த திருநாகேஸ்வரம் கல்லுக்கார தெருைவ சேர்ந்த ராஜாராமன்(48) என்பவர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

விபத்தில் வாலிபர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.


Related Tags :
Next Story