மதுரையில் சோதனைச்சாவடிக்குள் புகுந்த கார்
மதுரையில் சோதனைச்சாவடிக்குள் கார் புகுந்தது.
மதுரையில் இருந்து திண்டுக்கல் செல்லும் சாலையில் விளாங்குடி பரவை அருகே போலீஸ் சோதனை சாவடி உள்ளது. அங்கு கூடல்புதூர் போலீஸ்காரர் மகேந்திரன், ஆயுதப்படை போலீஸ்காரர் சசிவர்ணம் ஆகியோர் நேற்று மாலை பணியில் இருந்தனர். அவர்கள் வாகன சோதனை மேற்கொண்டு போக்குவரத்தை சரி செய்து கொண்டிருந்தனர். அந்த நேரத்தில் சமயநல்லூரில் இருந்து விளாங்குடி நோக்கி ஒரு கார் வேகமாக வந்தது.
அந்த கார், கட்டுப்பாட்டை இழந்து சோதனைச்சாவடியில் உள்ள இரும்பு தடுப்பு மீது மோதியதில், தடுப்பு தூக்கி வீசப்பட்டது. அதன்பின்னரும் நிற்காமல் சென்ற அந்த கார் அங்கிருந்த சோதனை சாவடிக்குள் புகுந்து, கண்காணிப்பு கேமரா, மோட்டார் சைக்கிள் மீது மோதி நின்றது. இந்த விபத்தில் போலீஸ்காரர் மகேந்திரன் லேசான காயத்துடன் உயிர் தப்பினார். மேலும் காரில் வந்த டிரைவரும் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.
இதுகுறித்து அறிந்த போலீசார் அங்கு விரைந்து வந்து விபத்தை ஏற்படுத்திய டிரைவரை பிடித்து விசாரித்தனர். அதில் கூடல்நகர், அப்பாத்துறை முதல் தெருவை சேர்ந்த அஜய்குமார் (வயது 38) என்பதும், அவர் ஒரு டாக்டருக்கு கார் டிரைவராக இருப்பதும் தெரியவந்தது. பின்னர் தல்லாகுளம் போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து டிரைவர் அஜய்குமாரை கைது செய்தனர்.