மின்கம்பத்தில் மோதிய கார்
சிவகாசியில் மின்கம்பத்தின் மீது கார் மோதிய விபத்தில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
சிவகாசி,
சிவகாசியில் மின்கம்பத்தின் மீது கார் மோதிய விபத்தில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
கார் மோதியது
சிவகாசி பஸ் நிலையத்தில் இருந்து வெம்பக்கோட்டை முக்கு வரை 2 கிலோ மீட்டர் தூரம் மாநகராட்சி நிர்வாகத்தின் சார்பில் அலங்கார மின்விளக்குகள் பொருத்த ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது. கடந்த பிப்ரவரி மாதம் இந்த பணி தொடங்கியது.
போதிய அகலத்தில் சாலை இல்லாத இந்த ரோட்டில் அலங்கார மின்விளக்குகளை பொருத்த வேண்டாம் என பல்வேறு தரப்பினர் மாநகராட்சி நிர்வாகத்திற்கு கோரிக்கை வைத்தனர். ஆனாலும் தொடர்ந்து அந்த பகுதியில் அலங்கார மின்விளக்குகளை பொருத்தும் பணி நடைபெற்று வருகிறது. இந்தநிலையில் நேற்று மாலை அந்த வழியாக வந்த கார் ஒன்று அலங்கார மின்விளக்கு பொருத்த அமைக்கப்பட்டு இருந்த மேடையின் மீது மோதி விபத்துக்குள்ளானது.
போக்குவரத்து பாதிப்பு
இதில் காரின் முன் பகுதி சேதமடைந்தது. இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதுகுறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து போக்குவரத்தை சரி செய்தனர். மிகவும் குறுகலான அந்த ரோட்டில் அலங்கார மின்விளக்கு பொருத்த ரோட்டின் நடுவே 2 அடி தேவைப்படுகிறது இதனால் அந்த பகுதியை கடந்து செல்வதில் கனரக வாகனங்கள் பெரும் சிரமம் அடைகின்றன.
எனவே அந்த ரோட்டில் இருக்கும் ஆக்கிரமிப்புகளை உடனடியாக அகற்றிவிட்டு வாகனங்கள் எளிதில் கடந்து செல்லும் வகையில் ஏற்பாடு செய்ய வேண்டும் என பாட்டாளி மக்கள் கட்சியின் விருதுநகர் மத்திய மாவட்ட தலைவர் டேனியல் மாநகராட்சி நிர்வாகத்திற்கு கோரிக்கை விடுத்துள்ளார்.