கோவையில் கேட்பாரற்று கிடந்த காரால் பரபரப்பு - விசாரணையில் வெளியான தகவல்
கோவையில் கேட்பாரற்று கிடந்த காரால் பரபரப்பு ஏற்பட்டது.
கோவை,
கோவையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு கோட்டை ஈஸ்வரன் கோவில் முன்பு கார் வெடித்து ஒருவர் பலியான சம்பவத்தால் மக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.
இந்த நிலையில் கோவை பீளமேட்டில் இயங்கி வரும் தனியார் பள்ளியின் முன்பு சென்னை பதிவெண் கொண்ட கார் நிற்பதை அப்பகுதி மக்கள் பார்த்து விட்டு காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் நடத்திய விசாரணையில், அந்த கார் பள்ளி தாளாளர் ரத்தினகுமாருடையது என்றும், தனது வீட்டில் இருந்து எடுத்து வந்து பழுது நீக்கும் கடைக்கு கொண்டு செல்வதற்காக காரை நிறுத்தி வந்ததும் கண்டறியப்பட்டது. இதைத் தொடர்ந்து போலீசாரின் அறிவுறுத்தலின் பேரில் காரை ரத்தின குமார் அங்கிருந்து எடுத்துச் சென்றார்.
கோட்டை ஈஸ்வரன் கோவில் முன்பு கார் வெடித்த நிலையில் தனியார் பள்ளி முன்பு கேட்பாரற்று நின்ற காரால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.