பாதயாத்திரை பக்தர்கள் கூட்டத்துக்குள் கார் புகுந்தது; சிறுவன் பலி


பாதயாத்திரை பக்தர்கள் கூட்டத்துக்குள் கார் புகுந்தது; சிறுவன் பலி
x
தினத்தந்தி 3 Feb 2023 12:15 AM IST (Updated: 3 Feb 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

பாவூர்சத்திரத்தில் பாதயாத்திரை பக்தர்கள் கூட்டத்துக்குள் கார் புகுந்த விபத்தில் சிறுவன் பலியானான். மேலும் வாலிபர் படுகாயம் அடைந்தார்.

தென்காசி

பாவூர்சத்திரம்:

தென்காசி மாவட்டம் செங்கோட்டை அருகே உள்ள பெரியபிள்ளைவலசையைச் சேர்ந்த பக்தர்கள் 20 பேர், தைப்பூசத்தையொட்டி நேற்று முன்தினம் மாலையில் பாதயாத்திரையாக திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கு புறப்பட்டனர். அவர்கள் இரவில் நெல்லை-தென்காசி சாலையில் பாவூர்சத்திரத்தில் உள்ள தேசிய மயமாக்கப்பட்ட வங்கி அருகே வந்து கொண்டிருந்தனர்.

அப்போது அந்த வழியாக தூத்துக்குடி நோக்கி சென்ற கார் ஒன்று எதிர்பாராதவிதமாக பக்தர்கள் கூட்டத்துக்குள் புகுந்தது. இதில் பெரியபிள்ளைவலசை சாந்தி நகர் பகுதியைச் சேர்ந்த முருகன் மகன் குணசேகரன் (வயது 16), முத்துராஜ் மகன் சூர்யா (18) ஆகிய இருவரும் பலத்த காயம் அடைந்தனர். உடனே அவர்களை சிகிச்சைக்காக தென்காசி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி குணசேகரன் பரிதாபமாக இறந்தார். சூர்யாவுக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்த விபத்து குறித்து பாவூர்சத்திரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து, காரை ஓட்டி வந்த தூத்துக்குடி மாவட்டம் மாப்பிள்ளையூரணியைச் சேர்ந்த முருகன் மகன் ஜெயக்குமார் (24) என்பவரை கைது செய்தனர். பாதயாத்திரை பக்தர்கள் கூட்டத்துக்குள் கார் புகுந்த விபத்தில் சிறுவன் பலியான சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.


Next Story