சரக்கு வாகனம் பள்ளத்தில் இறங்கியது; 10 பேர் காயம்
துவரங்குறிச்சி அருகே சரக்கு வாகனம் பள்ளத்தில் இறங்கியது. இதில், 10 பேர் காயம் அடைந்தனர்.
திருச்சி மாவட்டம் வளநாட்டை அடுத்த கலிங்கப்பட்டி என்ற கிராமத்தில் இருந்து துக்க நிகழ்ச்சிக்காக சரக்கு வாகனத்தில் 10 பேர் நேற்று இரவு தெத்தூர் சென்று விட்டு மீண்டும் தங்களது ஊரான கலிங்கப்பட்டிக்கு செல்வதற்காக மதுரை- திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் துவரங்குறிச்சி அருகே தெத்தூர் பிரிவு சாலை அருகே சென்று கொண்டிருந்தனர்.
அப்போது பின்னால் வந்த அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் சரக்கு வாகனம் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரத்தில் இருந்த பள்ளத்தில் இறங்கியது. இதில் சரக்கு வாகனத்தில் பயணம் செய்த 10 பேருக்கு லேசான மற்றும் பலத்த காயம் ஏற்பட்டது. பின்னர் அவர்கள் அனைவரும் துவரங்குறிச்சி அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை பெற்று மணப்பாறை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
அங்கு அவர்களுக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்து வருகிறார்கள். இந்த விபத்து குறித்து துவரங்குறிச்சி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.