ஓமலூர் அருகே17 வயது சிறுமியை கர்ப்பமாக்கிய வாலிபர் மீது வழக்கு
ஓமலூர்
ஓமலூர் அடுத்த தாரமங்கலம் பகுதியை சேர்ந்த கல் உடைக்கும் தொழிலாளி தனது மனைவியுடன் பெங்களூருவில் தங்கி வேலை செய்து வருகிறார். இவர்களுக்கு 2 மகன்கள், 3 மகள்கள் உள்ளனர். இதில் 17 வயது சிறுமி 9-ம் வகுப்பு வரை படித்துவிட்டு வீட்டில் இருந்தார்.
இந்த நிலையில் சிறுமியும், தாரமங்கலம் ஓம் சக்தி நகர் பகுதியை சேர்ந்த ரவி என்பவரும் காதலித்து வந்ததாக தெரிகிறது. கடந்த ஆண்டு சிறுமியின் பிறந்தநாளையொட்டி ரவி சிறுமியை மேட்டூருக்கு அழைத்துச் சென்றாராம். பின்னர் சிறுமியின் வீட்டுக்கு வந்த ரவி ஆசைவார்த்தை கூறி பலாத்காரம் செய்தார். இதனால் சிறுமி தற்போது 9 மாத கர்ப்பிணியாக உள்ளார்.
இதனை தொடர்ந்து கடந்த 7-ந் தேதி தாரமங்கலம் கைலாசநாதர் கோவிலில் வைத்து ரவி சிறுமிக்கு தாலி கட்டினாராம். இந்த நிலையில் சிறுமிக்கு வயிற்று வலி ஏற்படவே தாரமங்கலம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சைக்காக சேர்த்து விட்டு சென்றவர் திரும்பி வரவில்லை என தெரிகிறது. இதனால் அதிர்ச்சி அடைந்த சிறுமியின் பெற்றோர் விசாரித்ததில் ரவிக்கு ஏற்கனவே திருமணம் ஆகியிருப்பது தெரியவந்தது.
இதனையடுத்து சிறுமியை ஆசைவார்த்தை கூறி பலாத்காரம் செய்து கர்ப்பமாக்கிய ரவி மீது நடவடிக்கை எடுக்க கோரி ஓமலூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் சிறுமியின் தந்தை புகார் கொடுத்தார். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் இந்திரா, ரவி மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.