11 வயது சிறுவன் மீது வழக்கு
தேனி அருகே சக வகுப்பு மாணவனை தாக்கிய 11 வயது சிறுவன் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
தேனி அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்த 12 வயது சிறுவன் ஒரு பள்ளியில் 6-ம் வகுப்பு படித்து வருகிறான். அதே பள்ளியில் 11 வயது சிறுவனும் 6-ம் வகுப்பு படித்து வருகிறான். பள்ளியில் படிக்கும் போது அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டுள்ளது. பள்ளிகளுக்கு கோடை விடுமுறை விடப்பட்டுள்ள நிலையில், 12 வயது சிறுவன் அதே ஊரில் உள்ள தனது பாட்டி வீட்டுக்கு சென்று கொண்டு இருந்தான். அப்போது 11 வயது சிறுவன், பள்ளியில் நடந்த தகராறை மனதில் வைத்துக் கொண்டு தங்கள் தெருவுக்கு ஏன் வந்தாய் என்று தகராறு செய்துள்ளான். அப்போது அவன் அந்த சிறுவனை கையால் தாக்கி, தூக்கி கீழே போட்டுள்ளான். இதில் 12 வயது சிறுவனுக்கு கையில் எலும்பு முறிவு ஏற்பட்டது. அவன் சிகிச்சைக்காக தேனி அரசு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டான். இதுகுறித்து காயம்பட்ட சிறுவனின் தாய் பழனிசெட்டிபட்டி போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் தாக்கிய 11 வயது சிறுவன் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.