மாணவிகளை அடித்து காயம் ஏற்படுத்திய ஆசிரியை மீது வழக்கு
வேலூர் அருகே அரசுப்பள்ளியில் வீட்டுப்பாடங்கள் சரியாக எழுதாததால் மாணவிகளை மரக்கட்டை ஸ்கேலால் அடித்து காயம் ஏற்படுத்திய ஆங்கில ஆசிரியை மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
வேலூர் அருகே அரசுப்பள்ளியில் வீட்டுப்பாடங்கள் சரியாக எழுதாததால் மாணவிகளை மரக்கட்டை ஸ்கேலால் அடித்து காயம் ஏற்படுத்திய ஆங்கில ஆசிரியை மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
அரசு உயர்நிலைப்பள்ளி
வேலூரை அடுத்த இலவம்பாடியில் அரசு உயர்நிலைப்பள்ளி உள்ளது. இங்கு இலவம்பாடி, கம்மவார்பாளையம், குடிசை, புலிமேடு, செதுவாலை மற்றும் அதனை சுற்றியுள்ள பல்வேறு பகுதிகளை சேர்ந்த 400-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் படித்து வருகிறார்கள்.
இந்த பள்ளியில் ஆங்கில ஆசிரியையாக ராணிப்பேட்டை மாவட்டம் பூட்டுத்தாக்கு பகுதியை சேர்ந்த தீபலட்சுமி என்பவர் பணிபுரிகிறார்.
இவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு 7-ம் வகுப்பு மாணவர்களுக்கு பாடங்கள் நடத்திவிட்டு பின்னர் சில வீட்டுப்பாடங்களை கொடுத்துள்ளார்.
மறுநாள் அவற்றை ஆசிரியை தீபலட்சுமி பார்வையிட்டபோது சில மாணவிகள் வீட்டுப்பாடங்களை சரியாக எழுதாமல் வந்திருந்தனர். அதனால் அதிருப்தி அடைந்த ஆசிரியை மரக்கட்டை ஸ்கேலால் மாணவிகளை சரமாரியாக அடித்துள்ளார்.
4 மாணவிகள் காயம்
இதில் கம்மவார்பாளையத்தை சேர்ந்த 4 மாணவிகளுக்கு இடதுகை தோள்பட்டை, மணிக்கட்டு உள்ளிட்ட சில பகுதிகளில் உள்காயங்கள் ஏற்பட்டு அந்த பகுதி வீங்கி உள்ளது.
மாலையில் பள்ளி முடிந்தபின்னர் வீட்டிற்கு சென்ற மாணவிகளின் உடலில் காயங்கள் இருப்பதை கண்ட பெற்றோர் அவர்களை அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு அவர்களுக்கு முதலுதவி அளிக்கப்பட்டது.
இதுகுறித்து மாணவியின் பெற்றோர் விரிஞ்சிபுரம் போலீசில் புகார் அளித்தனர். அதன்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் முரளிதரன் ஆசிரியை தீபலட்சுமி மீது வழக்குப்பதிவு செய்தார்.
ஆசிரியையிடம் விளக்கம்
இதுபற்றி தகவலறிந்த வேலூர் மாவட்ட கல்வி அலுவலர் அங்குலட்சுமி மற்றும் அலுவலர்கள் இலவம்பாடி அரசுப்பள்ளிக்கு சென்று 7-ம் வகுப்பு மாணவர்கள் மற்றும் ஆசிரியை தீபலட்சுமியிடம் விசாரணை நடத்தினர்.
இதுகுறித்து வேலூர் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மணிமொழி கூறுகையில், வீட்டுப்பாடங்கள் சரியாக எழுதாததால் மாணவிகளை அடித்து காயம் ஏற்படுத்தியது தொடர்பாக ஆசிரியை தீபலட்சுமி மற்றும் 4 மாணவிகளிடமும் தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
முதற்கட்டமாக ஆசிரியை தீபலட்சுமியிடம் இதுதொடர்பாக விளக்கம் கேட்டு பெறப்பட்டுள்ளது. இந்த சம்பவம் குறித்து பள்ளி கல்வித்துறை உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அவர்களின் உத்தரவின்பேரில் ஆசிரியை மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார்.