கண்மாயை ஆழப்படுத்தி, உபரிநீர் திறப்பை குறைக்கக்கோரி வழக்கு
கண்மாயை ஆழப்படுத்தி, உபரிநீர் திறப்பை குறைக்கக்கோரிய வழக்கில் கலெக்டர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டு உள்ளது.
கண்மாயை ஆழப்படுத்தி, உபரிநீர் திறப்பை குறைக்கக்கோரிய வழக்கில் கலெக்டர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டு உள்ளது.
கண்மாயை தூர்வாரி
மதுரை மாவட்டத்தைச் சேர்ந்த முத்துலிங்கம், மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:-
மதுரை மாவட்டம் மேலூர் தாலுகா செம்மினிப்பட்டியில் கரும்பாட்சி கண்மாய் உள்ளது. இந்த கண்மாய் மூலம் தான் இப்பகுதி நிலங்களில் விவசாயம் செய்வதற்கு நீர்பாசனம் நடக்கிறது. இந்த கண்மாயை தூர்வாரி ஆழப்படுத்தாததால், குறைவான அளவு தண்ணீர்தான் சேமிக்கப்படுகிறது. ஏராளமான நீர், உபரி நீராக வெளியேறி, விவசாயத்தை பாதிக்கிறது.
எனவே கரும்பாட்சி கண்மாயை தூர்வாரி ஆழப்படுத்தி தண்ணீரை சேமிக்கவும், விவசாயத்தை பாதிக்கும் வகையில் கண்மாயில் இருந்து திறக்கப்படும் உபரிநீரின் அளவை குறைக்கவும் உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.
நடவடிக்கை
இந்த வழக்கு நீதிபதி கார்த்திகேயன் முன்பு விசாரணைக்கு வந்தது.
அப்போது நீதிபதி, மனுதாரரின் கோரிக்கை தொடர்பாக சம்பந்தப்பட்ட மேலூர் வட்டார வளர்ச்சி அதிகாரி, ஊராட்சித் தலைவர் உள்ளிட்ட அனைத்து தரப்பினருக்கும் மாவட்ட கலெக்டர் நோட்டீஸ் அனுப்ப வேண்டும். அதன்பேரில் கரும்பாட்சி கண்மாயை ஆழப்படுத்தி, உபரிநீரை குறைத்து விவசாயம் பாதிக்கப்படுவதை தடுக்கும் வகையில் உரிய ஆலோசனைகளை நடத்தி, 4 வாரத்தில் உரிய முடிவை எடுக்க வேண்டும்.
இவ்வாறு நீதிபதி உத்தரவிட்டார்.