நெல்லிக்குப்பம் அருகே குழந்தைகளை பார்க்க விடாமல் தடுத்ததால் டிரைவர் தற்கொலை


நெல்லிக்குப்பம் அருகே குழந்தைகளை பார்க்க விடாமல் தடுத்ததால் டிரைவர் தற்கொலை
x
தினத்தந்தி 26 Feb 2023 12:15 AM IST (Updated: 26 Feb 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

நெல்லிக்குப்பம் அருகே குழந்தைகளை பார்க்க விடாமல் தடுத்ததால் டிரைவர் தற்கொலை செய்து கொண்டார். அவரை தற்கொலைக்கு தூண்டியதாக காதல் மனைவி உள்பட 4 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

கடலூர்

நெல்லிக்குப்பம்,

கடலூர் மாவட்டம் நெல்லிக்குப்பம் அடுத்த மேல்பட்டாம்பாக்கம் பி.என். பாளையத்தை சேர்ந்தவர் ரீகன் (வயது 34). கார் டிரைவர். இவரும் அதே பகுதியை சேர்ந்த சபிதாராணி(27) என்பவரும் கடந்த 7 ஆண்டுகளுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு ஒரு மகன், மகள் உள்ளனர்.

இந்த நிலையில் இருவருக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக சபிதாராணி, தனது கணவரை பிரிந்து குழந்தைகள் மற்றும் குடும்பத்தினருடன் தற்போது நெல்லிக்குப்பம் அடுத்த வரக்கால்பட்டு பகுதியில் வசித்து வருகிறார்.

தூக்குப்போட்டு தற்கொலை

நேற்று முன்தினம் இரவு ரீகன் தனது குழந்தைகளை பார்ப்பதற்காக வரக்கால்பட்டில் உள்ள சபிதாராணியின் வீட்டிற்கு சென்றார். அப்போது சபிதா ராணி மற்றும் அவருடைய குடும்பத்தினர், குழந்தைகளை பார்க்க விடாமல் ரீகனை தடுத்ததாக தொிகிறது.

இதனால் மனமுடைந்த ரீகன், தனது வீட்டிற்கு சென்று, தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுபற்றி தகவல் அறிந்த நெல்லிக்குப்பம் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று, ரீகனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கடலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

4 பேர் மீது வழக்கு

இந்த நிலையில் ரீகன் இறப்பிற்கு, சபிதாராணி மற்றும் அவரது குடும்பத்தினர் தான் காரணம். எனவே அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். அதுவரை ரீகனின் உடலை வாங்க மாட்டோம் என்று அவருடைய உறவினர்கள் தெரிவித்தனர்.

பின்னர் ரீகனின் சகோதரர் விஜி, கொடுத்த புகாரின் பேரில் தற்கொலைக்கு தூண்டியதாக சபிதாராணி, இவருடைய தாய் வனிதா, சகோதரர்கள் கவிதாஞ்சன், நவதரன் ஆகியோர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து கவிதாஞ்சனை கைது செய்தனர்.


Next Story