திருமணம் செய்வதாக ஆசைவார்த்தை கூறி ஐடி நிறுவன பெண் ஊழியரை ஏமாற்றிய வாலிபர் மீது வழக்கு
திருமணம் செய்வதாக ஆசைவார்த்தை கூறி ஐடி நிறுவன பெண் ஊழியரை ஏமாற்றிய வாலிபர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
சென்னை வெட்டுவாங்கேனி பகுதியை சேர்ந்த 29 வயதுடைய பெண், சென்னையில் உள்ள ஐ.டி. கம்பெனியில் பணியாற்றி வருகிறார். இவருடைய தோழி ஒருவரின் மூலமாக சென்னை கோவிலம்பாக்கத்தில் உள்ள தனியார் நிறுவனம் ஒன்றில் பணியாற்றி வரும் விழுப்புரம் வி.பாளையத்தை சேர்ந்த ஸ்ரீதர் மகன் கோகுல்நாத் (வயது 32) என்பவர் அப்பெண்ணுக்கு அறிமுகமானார். அப்போது சில மாதங்களிலேயே அவர்களது பழக்கம் காதலாக மாறியது. அந்த சமயத்தில் கோகுல்நாத், அப்பெண்ணிடம் திருமணம் செய்வதாக ஆசைவார்த்தை கூறி நெருங்கி பழகி வந்துள்ளார். அவர், கோகுல்நாத்திடம் சென்று தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு வற்புறுத்தி கேட்டதற்கு அவர் திருமணம் செய்யாமல் ஏமாற்றி வந்தார். இந்நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு அப்பெண், விழுப்புரத்திற்கு வந்து கோகுல்நாத்தை தொடர்பு கொண்டு உங்கள் வீட்டிற்கு வந்து பெற்றோரிடம் பேசிக்கொள்வதாக கூறியுள்ளார். அதற்கு கோகுல்நாத், அப்பெண்ணை தனது வீட்டிற்கு அழைத்துச் செல்லாமல் விழுப்புரத்தில் உள்ள ஒரு தங்கும் விடுதிக்கு அழைத்துச் சென்றார். அப்போது அந்த பெண், கோகுல்நாத்திடம் தன்னை திருமணம் செய்துகொள்ளுமாறு வற்புறுத்தியுள்ளார். அதற்கு கோகுல்நாத், அந்த பெண்ணை திட்டியதோடு திருமணம் செய்ய மறுத்துவிட்டார். இதுகுறித்த புகாரின்பேரில் கோகுல்நாத் மீது விழுப்புரம் அனைத்து மகளிர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.