பண்ருட்டி அருகே ஊராட்சி மன்ற தலைவருடன் உல்லாசமாக இருந்த இளம்பெண் போலீசில் பரபரப்பு புகார் அந்தரங்க வீடியோவை சமூகவலைத்தளத்தில் வெளியிட்டவர் மீது வழக்கு
பண்ருட்டி அருகே ஊராட்சி மன்ற தலைவருடன் உல்லாசமாக இருந்த இளம்பெண் போலீசில் பரபரப்பு புகார் கொடுத்தார். அவரது அந்தரங்க வீடியோவை சமூகவலைத்தளத்தில் வெளியிட்டவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
பண்ருட்டி,
பண்ருட்டி பகுதியை சேர்ந்த ஊராட்சி மன்ற தலைவர் ஒருவர், 35 வயதுடைய இளம்பெண்ணுடன் உல்லாசமாக இருந்த வீடியோ சமூகவலைத்தளத்தில் பரவியது. இதுதொடர்பாக கடலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டிடமும் ஒருவர் புகார் கொடுத்தார்.
இந்த நிலையில் பண்ருட்டி போலீஸ் நிலையத்தில் இளம்பெண் பரபரப்பு புகார் கொடுத்தார். அந்த புகாரில் அவர் கூறியிருப்பதாவது:-
பழிவாங்கும் நோக்கத்துடன்...
எனக்கு, ஊராட்சி மன்ற தலைவர் கொழுந்தனார் உறவு முறை ஆகும். எனவே அவருக்கும், எனக்கும் நெருங்கிய பழக்கம் ஏற்பட்டது. இதன் காரணமாக நாங்கள் இருவரும் உல்லாசமாக இருப்போம். இதை செல்போனில் வீடியோ மற்றும் போட்டாவை எடுத்துக் கொள்வது வழக்கம். பின்னர் அதை அழித்து விடுவோம்.
இதை அறிந்த எங்கள் கிராமத்தை சேர்ந்த ஒருவர், எனது செல்போனில் இருந்த அந்தரங்க வீடியோ மற்றும் போட்டோவை எடுத்துள்ளார். தேர்தல் முன்விரோதம் காரணமாக ஊராட்சி மன்ற தலைவர் மற்றும் என்னை பழிவாங்கும் நோக்கத்துடன் அந்தரங்க வீடியோவை அவர் சமூக வலைத்தளங்களில் வெளியிட்டுள்ளார். எனவே அவர் மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவரது புகாரில் கூறப்பட்டுள்ளது.
புகாரின் பேரில் அந்தரங்க வீடியோவை சமூகவலைத்தளத்தில் வெளியிட்டவர் மீது அனைத்து மகளிர் போலீஸ் நிலைய சப்-இன்ஸ்பெக்டர் சுடர்மதி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.