வாகன விதி மீறலில் ஈடுபட்ட 1,218 பேர் மீது வழக்குப்பதிவு
குளித்தலை, நொய்யல் பகுதிகளில் வாகன விதி மீறலில் ஈடுபட்ட 1,218 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு, ரூ.3 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது.
வாகன சோதனை
கரூர் மாவட்டம், குளித்தலை, தோகைமலை, லாலாபேட்டை, மாயனூர், சிந்தாமணிப்பட்டி, பாலவிடுதி ஆகிய போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் குளித்தலை போக்குவரத்து போலீசார் வாகன சோதனை நடத்தி வருகின்றனர். இந்தநிலையில் கடந்த நவம்பர் மாதம் செய்த வாகன சோதனையில் லாரியில் அதிக பாரம் ஏற்றிவந்தது, குடிபோதையில் வாகனம் ஓட்டியது,
ஓட்டுனர் உரிமம் இல்லாதது, தலைகவசம் அணியாதது, இன்சூரன்ஸ் இல்லாதது, 3 பேர் இருசக்கர வாகனத்தில் சென்றது, செல்போன் பேசிக்கொண்டே வாகனம் ஓட்டியது, அதிவேகமாக வாகனம் ஓட்டியது, உரிய நம்பர் பிளேட் பொருத்தாமல் இருந்தது, சரக்கு வேன்களில் ஆட்களை ஏற்றுவது.
1,018 பேர் மீது வழக்கு
தடை செய்யப்பட்ட இடத்தில் வாகனத்தை நிறுத்துவது, சீட் பெல்ட் அணியாதது போன்ற பல்வேறு வாகன விதிமீறல்களில் ஈடுபட்ட 1,018 பேர் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் அவர்களுக்கு மொத்தம் ரூ.3 லட்சத்து 4 ஆயிரத்து 900 அபராதம் குளித்தலை போக்குவரத்து போலீசாரால் விதிக்கப்பட்டுள்ளது. எனவே வாகன ஓட்டிகள் வாகன விதிமுறைகளை முறையாக கடைபிடிக்க வேண்டும். மேற்கண்ட தகவலை குளித்தலை போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் நாவுக்கரசு தெரிவித்தார்.
நொய்யல்
கரூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுந்தரவதனம் உத்தரவின் பேரில் வேலாயுதம்பாளையம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் வள்ளிமுத்து தலைமையிலான போலீசார் கொண்ட குழுவினர் தவிட்டுப்பாளையம் போலீஸ் சோதனை சாவடி அருகே விபத்துக்களை தடுக்கும் வகையில் சேலம்- கரூர் தேசிய நெடுஞ்சாலையில் திடீர் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது சேலம், நாமக்கல், பரமத்தி வேலூர், திருச்செங்கோடு பகுதிகளில் இருந்து கரூர் நோக்கி வந்த லாரிகள், கார்கள், வேன்கள் மற்றும் இருசக்கர வாகனங்கள் என அந்த வழியாக வந்த அனைத்து வாகனங்களையும் நிறுத்தி வாகன சோதனை செய்தனர்.
அப்போது குடிபோதையில் வாகனம் ஓட்டி வந்தவர்கள், காரில் சீட் பெல்ட் அணியாமல் காரை ஒட்டி வந்தவர்கள், காரில் அமர்ந்து சீட் பெல்ட் அணியாதவர்கள், ஓட்டுநர் உரிமம் இன்றி வாகனம் ஓட்டியவர்கள், ஓவர் லோடு ஏற்றி வந்த லாரிகள், மேலும் லாரிகள், வேன்களில் அதிக உயரம் பாரம் ஏற்றி வந்தவர்கள், தலைக்கவசம் அணியாமல் இரு சக்கர வாகனத்தை ஒட்டி வந்தவர்கள் என சுமார் 200-க்கும் மேற்பட்டவர்கள் மீது வழக்குப்பதிவு செய்தனர்.
இதேபோல் கரூர் -சேலம் தேசிய நெடுஞ்சாலையில் மூலிமங்கலம் பிரிவு, புன்னம் சத்திரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலும் போலீசார் திடீர் வாகன சோதனையில் ஈடுபட்டனர். இதனால் வாகனங்கள் நீண்ட வரிசையில் நின்று சென்றன.
குளித்தலை, நொய்யல் பகுதிகளில் வாகன விதி மீறலில் ஈடுபட்டதாக 1,218 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.