ரூ.16½ லட்சம் கையாடல் செய்த ஊழியர் மீது வழக்குப்பதிவு
இருசக்கர வாகன விற்பனை நிறுவனத்தில் ரூ.16½ லட்சம் கையாடல் செய்த ஊழியர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
வெளிப்பாளையம்:
தஞ்சை மாவட்டம் வல்லம் பாரத் நகர் பகுதியை சேர்ந்தவர் செல்வக்குமார். இவர் நாகை மாவட்டம் கீழையூர் அருகே தாதன் திருவாசல் என்ற பகுதியில் இரு சக்கர வாகன விற்பனை மையம் வைத்துள்ளார். இதில் வேதாரண்யம் தோப்புத்துறை காமராஜர் காலனியை சேர்ந்த சரவணன் விற்பனை முகவராக பணியாற்றி வந்தார். கடந்த 2020-ம் ஆண்டு கணக்குகள் சரி பார்க்கும் போது சரவணன் வாடிக்கையாளர்களிடம் இருந்து பெறும் பணத்தை முறையாக வரவு வைக்காமல் கையாடல் செய்தது தெரியவந்தது.இதையடுத்து மோசடி செய்த பணத்தை செலுத்த வேண்டும் என எச்சரித்து சரவணனை பணியில் சேர்த்தனர். பின்னர் 2022-ம் ஆண்டு மார்ச் மாதம் மீண்டும் கணக்குகளை சரிபார்த்த போது சரவணன் வாடிக்கையாளர் பணத்தை மீண்டும் கையாடல் செய்திருப்பது தெரியவந்தது. இவ்வாறு அவர் ரூ.16 லட்சத்து 55 ஆயிரம் கையாடல் செய்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இது குறித்து செல்வக்குமார் கொடுத்த புகாரின் பேரில் நாகை மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் சரவணன் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.