தொழிற்சாலை ஊழியரை கடத்தி பணம் பறித்த வழக்கு:போலீஸ் காவலில் எடுத்த வாலிபரிடம் ரூ.1 லட்சம் பறிமுதல்
சென்னிமலை அருகே தொழிற்சாலை ஊழியரை கடத்தி பணம் பறித்த வழக்கில் காவலில் எடுத்த வாலிபரிடம் இருந்து ரூ.1 லட்சத்தை போலீசார் பறிமுதல் செய்தனர்.
சென்னிமலை
சென்னிமலை அருகே தொழிற்சாலை ஊழியரை கடத்தி பணம் பறித்த வழக்கில் காவலில் எடுத்த வாலிபரிடம் இருந்து ரூ.1 லட்சத்தை போலீசார் பறிமுதல் செய்தனர்.
முக்கிய நபர் சரண்
பெருந்துறையை சேர்ந்தவர் சத்தியமூர்த்தி (வயது 47). இவர் சென்னிமலை அருகே ஈங்கூரில் உள்ள ஒரு இரும்பு தொழிற்சாலையில் வேலை பார்த்து வருகிறார். இவரை கடந்த மாதம் 23-ந் தேதி மர்ம நபர்கள் காருடன் கடத்தி சென்று நிறுவனத்துக்கு சொந்தமான ரூ.23 லட்சத்தை கொள்ளையடித்து சென்றனர்.
இந்த வழக்கில் ஏற்கனவே 4 பேரை சென்னிமலை போலீசார் கைது செய்து அவர்களிடமிருந்து ரூ.4 லட்சத்து 55 ஆயிரம் பணத்தை பறிமுதல் செய்தனர். மேலும் இந்த வழக்கில் தொடர்புடைய முக்கிய நபரான புதுக்கோட்டை மாவட்டம் கண்ணங்குடியை சேர்ந்த கார் டிரைவர் ராஜசேகர் (32) என்பவர் அறந்தாங்கி மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் கடந்த 5-ந் தேதி சரண் அடைந்திருந்தார்.
ரூ.1 லட்சம் பறிமுதல்
இதைத்தொடர்ந்து இவரை சென்னிமலை போலீசார் பெருந்துறை மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் ஆஜர்படுத்தி 5 நாட்கள் காவலில் எடுத்தனர். பின்னர் சென்னிமலை போலீஸ் இன்ஸ்பெக்டர் சரவணன் தலைமையிலான போலீசார், சரண் அடைந்த ராஜசேகரை அவரது சொந்த ஊருக்கு அழைத்து சென்று விசாரணை நடத்தினார்கள்.
அப்போது கொள்ளையடித்த பணத்தில் நண்பர்களுக்கு கொடுத்தது போக ரூ.1 லட்சத்தை தனது சகோதரியான திருச்சி அருகே உள்ள கோவில்வீரக்குடியில் வசிக்கும் தமிழரசி என்பவரிடம் கொடுத்திருந்தாக தெரிவித்தார். அவர் கொடுத்த தகவலின் பேரில் போலீசார் தமிழரசியின் வீட்டுக்கு சென்று அவரிடம் இருந்து ரூ.1 லட்சத்தை பறிமுதல் செய்தனர்.
கோர்ட்டில் ஆஜர்
தற்போது ராஜசேகருக்கு 5 நாட்கள் போலீஸ் காவல் முடிந்ததால் நேற்று சென்னிமலை போலீசார் ராஜசேகரை மீண்டும் பெருந்துறை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இன்னும் பறிமுதல் செய்யப்படாமல் உள்ள பணம் யார் யாரிடம் கொடுக்கப்பட்டுள்ளது என்பது குறித்து போலீசார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.