தேவர் என அழைக்கும் அரசாணையை அமல்படுத்தக்கோரி வழக்கு
தேவர் என அழைக்கும் அரசாணையை அமல்படுத்தக்கோரிய வழக்கில் பிற்படுத்தப்பட்டோர் நல ஆணையம் பதில் அளிக்க மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டது.
மதுரை மாவட்டம் மேலூரைச் சேர்ந்த வக்கீல் ஸ்டாலின், மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:-
தமிழ்நாட்டில் கள்ளர், மறவர், அகமுடையார் இணைந்த முக்குலத்தோர் சமுதாயத்தை தேவர் என்ற பெயரில் அழைப்பது தொடர்பாக கடந்த 11.9.1995 அன்று அரசாணை வெளியிடப்பட்டது. அந்த அரசாணையை இதுவரை அமல்படுத்தவில்லை. கள்ளர், அகமுடையார் மற்றும் சேர்வை பிரிவினர் பிற்படுத்தப்பட்டோர் பிரிவிலும், பிரமலைக் கள்ளர் மற்றும் மறவர் வகுப்பினர் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் பிரிவிலும் உள்ளனர்.
தமிழ்நாட்டின் மக்கள் தொகையில் 15 முதல் 20 சதவீதம் பேர் வரை தேவர் சமுதாயத்தினர் உள்ளனர். எனவே மிகவும் பிற்படுத்தப்பட்டோர் பிரிவின் கீழ் தேவர் சமுதாயத்தை அங்கீகரிக்கும் வகையில் அரசாணையை முறையாக அமல்படுத்த உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.
இந்த வழக்கு நீதிபதிகள் எஸ்.எஸ்.சுந்தர், பரதசக்கரவர்த்தி ஆகியோர் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது.
அப்போது நீதிபதிகள், இந்த வழக்கு குறித்து பிற்படுத்தப்பட்டோர் நல ஆணையம் சார்பில் பதில் அளிக்கும்படி உத்தரவிட்டு, விசாரணையை ஒத்திவைத்தனர்.