அதிக வட்டி தருவதாக மோசடி செய்த தம்பதி மீது வழக்கு
கூடலூர் தனியார் நிதி நிறுவனத்தில் அதிக வட்டி தருவதாக பண மோசடி செய்த தம்பதி மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
ஊட்டி,
கூடலூர் தனியார் நிதி நிறுவனத்தில் அதிக வட்டி தருவதாக பண மோசடி செய்த தம்பதி மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
பண மோசடி
நீலகிரி மாவட்டம் கூடலூர் நந்தட்டியை தலைமையிடமாக கொண்டு தனியார் நிறுவனம் செயல்பட்டு வந்தது. இந்த நிறுவனத்தின் கிளைகள் கோவை, சென்னை, சேலம், ஓசூர், ஊட்டி, கேரளா, மைசூரு ஆகிய இடங்களில் அலுவலகம் வைத்து நேரடியாகவும், ஆன்லைன் மூலமாகவும் இயங்கியது. நிறுவனத்தின் இயக்குனர்களாக கூடலூரை சேர்ந்த துரைராஜ், அவரது மனைவி சாரதா ஆகியோர் பணிபுரிந்தனர். அவர்கள் பொதுமக்களிடம் இருந்து அதிக வட்டி தருவதாக கூறி முதலீட்டை பெற்றனர். அதிக வட்டி கிடைக்கும் என்ற நம்பிக்கையில் பலர் தங்களது பணத்தை முதலீடு செய்தனர். ஆனால், இதுவரை கோடிக்கணக்கான பணத்தை முதலீடாக பெற்று திரும்ப தராமல் கணவன், மனைவி மோசடி செய்ததாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக கோவையை சேர்ந்த சபரிநாதன் என்பவர் அளித்த புகாரின் பேரில், கோவை பொருளாதார குற்ற பிரிவு போலீசார் துரைராஜ், சாரதா மீது வழக்குப்பதிவு செய்தனர்.
போலீசார் வலைவீச்சு
தற்போது இந்த வழக்கு குறித்து நீலகிரி மாவட்ட பொருளாதார குற்ற பிரிவு போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர். மேலும் மோசடி தொடர்பாக தலைமறைவான கூடலூர் தம்பதியை வலைவீசி தேடி வருகின்றனர். இதுகுறித்து பொருளாதார குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் பிரவினா வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டு உள்ளதாவது:-
தனியார் நிதி நிறுவனத்தில் பணம் செலுத்தி பாதிக்கப்பட்ட பொதுமக்கள் தகுந்த ஆதாரங்களுடன் ஊட்டி சேரிங்கிராஸ் கூட்டுறவு அச்சகத்தில் உள்ள மாவட்ட பொருளாதார குற்ற பிரிவில் புகார் அளிக்கலாம். எனவே, முதலீடு செய்து பாதிக்கப்பட்டவர்கள் வருகிற 31-ந் அலுவலகத்தை அணுகி புகார் அளிக்க வேண்டும். மேலும் 949817640 என்ற செல்போன் எண்ணை தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.