ஊட்டி பஸ் நிலையம் அருகே தனியார் பஸ் மோதி காசாளர் பலி
ஊட்டி பஸ் நிலையம் அருகே தனியார் பஸ் மோதி காசாளர் பரிதாபமாக உயிரிழந்தார்.
ஊட்டி
ஊட்டி பஸ் நிலையம் அருகே தனியார் பஸ் மோதி காசாளர் பரிதாபமாக உயிரிழந்தார்.
இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-
கோழி இறைச்சி விற்பனை நிலையம்
நீலகிரி மாவட்டம் ஊட்டி காந்தல் பகுதியைச் சேர்ந்தவர் நூருதீன். (வயது 60). இவர் ஊட்டி பஸ் நிலையம் அருகில் உள்ள தனது தம்பி காஜா என்பவருக்கு சொந்தமான பிரியாணி கடையில் காசாளராக பணிபுரிந்து வந்தார்.
இந்தநிலையில் நேற்று முன்தினம் இரவு 9 மணியளவில் இவர்பணி முடித்து வீடு திரும்புவதற்காக ஊட்டி மத்திய பஸ் நிலையம் அருகே சாலையை கடக்க முயன்றார்.
பஸ் மோதி பலி
அப்போது பஸ் நிலையம் அருகில் உள்ள ரவுண்டானா பகுதியில் ஊட்டியில் இருந்து பெங்களூருவுக்கு செல்லும் கர்நாடக மாநிலத்தை சேர்ந்த தனியார் பஸ் அவர் மீது மோதியது. இதில் உடல் நசுங்கி ரத்த வெள்ளத்தில்சம்பவ இடத்திலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த பயணிகள் இதுகுறித்து போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். இதன் பேரில் ஊட்டி நகர மேற்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் பிலிப் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஊட்டி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்து பஸ் டிரைவரான ராமு என்பவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதற்கிடையே பஸ் டிரைவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருவதாலும், பஸ்சை பறிமுதல் செய்ததாலும் ஊட்டியில் இருந்து பெங்களூரு சென்ற பயணிகள் மாற்று பஸ் மூலம் அனுப்பி வைக்கப்பட்டனர். இந்த விபத்து காரணமாக பஸ் நிலையம் பகுதியில் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
டாஸ்மாக் கடையை இடம் மாற்ற வேண்டும்
இந்த நிலையில் விபத்து நடந்த ரவுண்டானா பகுதியில் காந்தல் சாலை, ரயில் நிலையம் சாலை, மெயின் பஜார் சாலை, லோயர் பஜார் சாலை மற்றும் பஸ் நிலையத்தில் இருந்து வரும் சாலை சந்திக்கும் இடமாக இருப்பதால் அந்த இடம் நெரிசல் மிகுந்து காணப்படுகிறது.
மேலும் அந்த சாலைகளின் இரு புறங்களில் சாலையோர கடைகளும், டாஸ்மாக் மதுக்கடையும் இருக்கிறது. ஆனால் கூடுதல் நெரிசல் ஏற்படுகிறது. எனவே சாலையோர கடைகளை அகற்றியும் டாஸ்மாக் கடையை இடம் மாற்றவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் கோரிக்கை விடுக்கப்பட்டது.
இதற்கு இடையே பஸ் நிலைய ரவுண்டானா பகுதியில் இருந்த சிறு சிறு ஆக்கிரமிப்புகளை பொக்லைன் எந்திரம் மூலம் போலீசார் அகற்றினார்கள்.