தடுப்பு சுவரில் ஆட்டோ மோதி கவிழ்ந்ததில் குழந்தை- சிறுமி பலி


தடுப்பு சுவரில் ஆட்டோ மோதி கவிழ்ந்ததில் குழந்தை- சிறுமி பலி
x

பழவூர் அருகே திருமணத்துக்கு சென்றபோது, சாலை தடுப்பு சுவரில் ஆட்டோ மோதி கவிழ்ந்ததில் குழந்தையும், சிறுமியும் பரிதாபமாக பலியானார்கள். மேலும் 2 பேர் பலத்த காயம் அடைந்தனர்.

திருநெல்வேலி

வடக்கன்குளம்:

பழவூர் அருகே திருமணத்துக்கு சென்றபோது, சாலை தடுப்பு சுவரில் ஆட்டோ மோதி கவிழ்ந்ததில் குழந்தையும், சிறுமியும் பரிதாபமாக பலியானார்கள். மேலும் 2 பேர் பலத்த காயம் அடைந்தனர்.

திருமணத்துக்கு சென்றவர்கள்

நெல்லை மாவட்டம் வடக்கன்குளம் அருகே காவல்கிணறு பகுதியை சேர்ந்தவர் நவமணி மகன் ராஜதுரை (வயது 52). இவருக்கு முருகன் என்ற மகனும், அனுசியா (15) என்ற மகளும் இருந்தனர்.

முருகனுக்கு திருமணம் ஆகி பிரதிஷா என்ற ஒரு வயது குழந்தை இருந்தது.

ராஜதுரை சொந்தமாக ஆட்டோ வைத்து ஓட்டி வருகிறார். இவருடைய உறவினர் வீட்டு திருமணம் செட்டிக்குளத்தில் நடந்தது. இதில் கலந்து கொள்வதற்காக முருகனின் மனைவி பிரீத்தி, அனுசியா, பேத்தி பிரதிஷா ஆகியோர் ஆட்டோவில் சென்றனர். ஆட்டோவை ராஜதுரை ஓட்டிச்சென்றார். ஆட்டோ, பழவூர் போலீஸ் நிலையத்தை அடுத்துள்ள நான்கு வழிச்சாலையில் சென்று கொண்டிருந்தது. அப்போது எதிர்பாராதவிதமாக ஆட்டோ கட்டுப்பாட்டை இழந்து சாலையின் தடுப்புச்சுவரில் மோதி கவிழ்ந்தது.

2 பேர் பலி

இந்த விபத்தில் ஆட்டோவில் இருந்த ராஜதுரை, பிரீத்தி, அனுசியா, பிரதிஷா ஆகிய 4 பேரும் படுகாயம் அடைந்தனர். உடனே அக்கம்பக்கத்தினர் அங்கு வந்து அவர்களை மீட்டு நாகர்கோவில் ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

சோகம்

அங்கு சிகிச்சை பலனின்றி அனுசியாவும், பிரதிஷாவும் பரிதாபமாக இறந்தனர். மற்ற 2 பேருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து பழவூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். ஆட்டோ கவிழ்ந்த விபத்தில் குழந்தை, சிறுமி பலியான சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.


Next Story