லாரி சக்கரத்தில் சிக்கி குழந்தை பலி
சோளிங்கரில் லாரி சக்கரத்தில் சிக்கி 1½ வயது குழந்தை பலியானது.
சோளிங்கரில் லாரி சக்கரத்தில் சிக்கி 1½ வயது குழந்தை பலியானது.
பால் லாரி சக்கரத்தில்...
ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கரை அடுத்த காட்ரம்பாக்கம் கிராமத்தை சேர்ந்தவர் கோபி (வயது 30). இவருக்கு 1½ வயதில் திவ்யா என்ற பெண் குழந்தை இருந்தது. குழந்தை திவ்யாவை சோளிங்கர் வெங்கட்ராய பிள்ளை தெருவில் வாடகை வீட்டில் வசித்து வரும் அவரது தாத்தா, பாட்டி வளர்த்து வந்தனர். இந்தநிலையில் குழந்தை திவ்யா வீட்டில் விளையாடி கொண்டிருந்தபோது, திடீரென வீட்டின் அருகே உள்ள சாலைக்கு சென்றதாக கூறப்படுகிறது.
அப்போது சோளிங்கரில் இருந்து, பள்ளிப்பட்டுக்கு சென்ற பால் லாரியின் முன் சக்கரத்தில் குழந்தை திவ்யா சிக்கி படுகாயமடைந்தது. உடனடியாக குழந்தையை சோளிங்கர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது.
குழந்தை பலி
பின்னர் மேல் சிகிச்சைக்காக வேலூர் அரசு மருத்துவமனைக்கு 108 ஆம்புலன்ஸ் மூலம் அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி குழந்தை திவியா இறந்து விட்டது.
இதுகுறித்து சோளிங்கர் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் விபத்துக்கு காரணமான லாரி பறிமுதல் செய்யப்பட்டது.